உறைபனி என்னில் பொழிகிறாய்-19

Mar 30, 2024 - 18:29
 0  498
உறைபனி என்னில் பொழிகிறாய்-19

அத்தியாயம்-19

எல்லோரும் திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்தது ரித்திக்... ருத்ரனின் மறுஉருவாக... கண்கள் சிவந்து காதுவிடைக்க நின்றிருந்தவனைக் கண்டதும்.

வைபவ் ஐயோ என்று தலையில் கைவைத்து நின்றுவிட்டான்...பத்மாவோ ரித்திக்கை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவசரமாக  அவனருகில் சென்று... 

நீ எப்போ வந்த ராஜா என்று அவனது தாடையைப் பிடித்துக் கேட்க.

அவனது கண்களில் கண்ணீர் நீங்களும் ஆதி அத்தனோட விசயத்தை என்கிட்ட மறச்சிட்டீங்கதான என்றவன்... அவரது கையை எடுத்துவிட்டவன்.

ரிஷியின் அருகில் வந்தவன்...உன்னை எங்க ஆதி அத்தான் இடத்துல வச்சதுக்கு காரணம் எங்க பாப்பா...அவளோட மனதில்  என்ன மாற்றமோ தெரியாது...உன்னை  பிடிச்சிருக்குனு அவளா சொன்னதனால  மட்டும் தான் கல்யாணம் பண்ணிவச்சோம்...இல்லைனா நீயெல்லாம் எங்க பாப்பாவுக்கு பக்கத்துல நிக்க முடியுமா?

என் தங்கச்சிய நீ தகரம்னு சொல்லிருக்க ஹான் உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்...உன்னை கொன்னுப்போடத்தான் வந்தேன்.. வந்தது நல்லதுதான், நிறைய விசயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீயா சமாதானமாகி வந்தாக்கூட  இனி எங்க பாப்பவுக்கு நீ வேண்டாம்...அவள் எங்க தங்கையாகவே இருந்துட்டுப் போகட்டும்;

எங்க ஆதி அத்தான் இருந்திருந்தால் என் தங்கையோட வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் தெரியுமா? அவளை அழ வச்ச யாரையும் சும்மா விடமாட்டேன்... என்று அவசர அவசரமாக வெளியே சென்றான்.

வைபவ் பயந்து ப்ரணவிற்கு  அழைத்து  விசயத்தை சொல்ல, அவனும் கேசவ்வும் ரித்திக்கின் வரவை எதிர்பார்த்து இருந்தனர்.

இங்கோ அவர்கள் விடைபெற்று செல்லவும் ரிஷி சோபாவில் பின்பக்கமாக தலையை சாய்த்து அப்படியே அமர்ந்திருந்தான்.

எதனால் சந்தனாவிற்கு என்னைப் பிடித்திருந்தது. ஆதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்...உருவ ஒற்றுமையில்லை, இரத்த சம்பந்தமும் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். 

அந்தநேரம் விஜிம்மா கிளம்பி வந்து " நான் சந்தனாவைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போறேன், நீ என்ன முடிவெடுத்திருக்க வர்றீயா என்ன"

அதற்குள் ரிஷி ஒரு முடிவோடுதான் இருந்தான்...சொல்லுறவன் என்ன வேணாலும் சொல்லுவான் நமக்கு எங்கப் போச்சுது புத்தி...அவன் என்ன வேணாலும் சொல்லிருக்கலாம், உன் மனைவியை உனக்குத்தெரியாதா?

ஆதியின் அந்த கள்ளமில்லா அன்பை என்னிடம் அவளது ஆழ்மனது எதிர்பார்த்ததோ... ச்ச என்ன செய்துவச்சிட்டேன் என தன்னைத்தானே நொந்துக் கொண்டிருக்க, அப்போதுதான்  விஜிம்மா வந்து கேட்கவும்...மனைவியை பார்க்கப்போகும் ஆவலில் சரி என்று தலையாட்டினான்.

ரிஷியும் அவனது பெற்றோருமாக கிளம்பி மருத்துவமனைக்கு சென்றனர். அப்போதுதான் சந்தனாவை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ரித்திக் ப்ரணவுடன் நின்றிருந்தான்.

ரிஷி உள்ளே வரவும் அவனது நெஞ்சில் கை வைத்து, தள்ளியவன் நீ என் தங்கச்சிய பார்க்க போகக்கூடாது, இதுவரைக்கு ரொம்ப பேசியிருக்கிற; போதும் இனி உன் கூட வாழ்ந்தா என் தங்கச்சிய சந்தேகப்படுவ...எத்தனை நாளைக்கு உன்கிட்ட விளக்கம் சொல்லி வாழமுடியும் என்று சத்தம்போட்டான்.

ப்ரணவ் தான் "டேய் சத்தம்போடாதடா 

ஆதிவிசயம் இன்னும் சந்து பாப்பாக்குத் தெரியாது, அவ என்னனுக் கேட்டதுக்கு விஷ்வேஷ் பொண்ணுக் கேட்டது மட்டும்தான் சொல்லி, அதனாலதான் விஷ்வேஷ் பழிவாங்குறானு சொல்லி வச்சிருக்கு, புரியுதா உன் அவசரப்புத்தியால எதாவது கேனைத்தனமா பண்ணிடாத என்று சொல்லவும்தான், அமைதியாக நின்றான்.

அந்த நேரம் பார்த்து சந்தனா வெளியே வரவும், ரிஷி அவளருகில் செல்ல தனது கையை வைத்து தடுத்தவள்...

எங்க அண்ணனுங்க எனக்கு மாமா வேலை பார்க்குறாங்கனு சொன்னீங்கதான, அப்போ நான் என்ன தொழில் செய்திருக்கணும்னு நீங்க சொல்ல வந்தீங்க? என்று கேட்டவள் அவனது கண்களைத் தீர்க்கமாக பார்த்துக் கேட்டாள்.

இப்போதுதான் பேசிய வார்த்தைகளின் விபரீதம் புரிந்தது ரிஷிக்கு..ஏஞ்சல் ப்ளீஸ்  நான் தெரியாம பேசிட்டேன் என்று அவன் கண்களும் வாய் மொழியும் யாசிக்க.

லேசாக சிரித்தவள் நான் இதேமாதிரி வேற மாதிரி தப்பு செய்துட்டு வந்து மன்னிப்பு கேட்டுக்கலாமா? என்று சொல்லும்போதே அவளது கண்களில் கண்ணீர் வர, அதை துடைக்க போகும்போது… உண்மையான அன்பு எந்த தப்பையும் மன்னிக்கும், ஆனா நீங்க  என்ன செய்தீங்க...எனக்கு உங்கமேல எந்தக் கோபமும் இல்லை, நான் உங்களை மன்னிக்குறேன்...ஆனா திரும்ப சேர்ந்து வாழ்றது வேண்டாம் ப்ளீஸ்" என்றவள்  அப்படியே இறங்கி தனது அண்ணனின் காரில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

சந்தனா ரிஷியிடமிருந்து  அப்படிப்பட்ட வார்த்தைகளை  எதிர்பார்க்கவில்லை.

ரிஷியின் குணமும் ஆதியின் குணமும் ஒன்று தான்...தங்களை சுற்றியிருக்கின்றவர்களை எப்போதும் சந்தோஷமாகவும், நேர்மறை எண்ணத்தோடும் வைத்திருப்பவர்கள்.

அதானால்தான் சந்தனா அவனை நாடினாளோ...அந்த கடவுளுக்கும்  சந்தனாவின் இன்னொரு உயிரான ஆதிக்குமே அது வெளிச்சம்.

ஆனால் ரிஷி பேசிய வார்த்தைகள் சந்தனாவின் மனதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

சந்தனா போனதும், ரிஷி அவள் சென்ற திசைப் பார்த்திருக்க, எப்படி சமாதானம் செய்யவென புரியாமல் நின்றிருந்தான்.

தன் வீட்டுக்கு வந்தவன் என்ன செய்யலாம் என்ற வேதனையில் படுத்திருக்க;

விஜிம்மா வந்து அவனருகில் நின்றார், ஏறிட்டுப்பார்த்தவன்...சாப்பாடு வேண்டாம் விஜி, எனக்கு பசிக்கலை.

அவரோ அவனது அருகில் அமர்ந்து... சந்தனாக் குடும்பம் நல்லக்குடும்பம் இல்லை...எவ்வளவு நல்ல மனுசங்க இப்படி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்...

ஏது உங்க அண்ணன் தம்பிக்கிட்டயா கொடுத்துவச்சிருக்கணும்...என்று அவரை முறைத்துப் பார்த்தவன்..உன்னாலதான் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணிருக்கேன்...இல்லைனா நல்ல பொறுமையா காதலிச்சு அவளைத் தெரிஞ்சுட்டு கல்யாணம் பண்ணிருப்பேன்...இப்போ வந்து நல்லக்குடும்பம்னு கதையவே மாத்தற.

எல்லாருக்கும் வரக்கூடிய பயம்தான்டா எனக்கும்; எங்க நம்ம பையன் தப்பான பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டப்பட்டிருவானோனு பயம்டா..அதான் அப்படிச் செய்தேன் என்று முகத்தை அப்பாவியாக வைத்து பேசினார்.

ரிஷியோ இப்போ அவளை எப்படி சமாதானப்படுத்துறதுனுத் தெரியலை, பாவம்மா சந்தனா என்கிட்ட எவ்வளவு ஆசையா கர்ப்பமான விசயத்தை சொல்ல வந்திருப்பா என்னோட வார்த்தைகளைக் கேட்டு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பா பாவம்? என்று வேதனைப்பட...

என்னது கர்ப்பமா இருக்காளா? இதை நீ சொல்லவேயில்லை...ஐயோ கிராதாக மாசமா இருக்க பிள்ளையைப் போய் என்னலாம் பேசிருக்க என்று அவனை திட்ட ஆரம்பித்தார் விஜிம்மா.

இது என்னடா புதுசா பாசமெல்லாம் பொங்குது விஜிக்கு...இந்த பெண்களை புரிஞ்சிக்கவே முடியலையே ஆண்டவா! ஏற்கனவே பொண்டாட்டிய எப்படி சமாதனாப்படுத்தனு யோசிச்சே தலைவலிக்குது... இதுல இந்த அம்மா வேற என்று சத்தமாக புலம்ப ஆரம்பிக்க.

விஜிம்மாவிற்கோ வேதனையாகப் போயிற்று, வாய்ல வந்ததைப் பேசிட்டு இப்போ வருத்தப்படறானே என்று.

சந்தனாவின் அண்ணன்களே உன்னையக் கடத்திட்டுப் போய் தான் கல்யாணம் நடத்திவச்சாங்க...அதைவிட பெரிய பிளானாப் போட்டாத்தான் நீ சந்தனாவைப் பார்க்கவே முடியும் என்று எதேச்சையாக சொல்ல...

ஹய்யோ...விஜி ஐடியா பிடிச்சிட்டேன்...தேங்க்ஸ் என்று அவரது கன்னத்தை கிள்ளிவைக்க...இவனுக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சிட்டா என்ற ரீதியில் விஜிம்மா பார்க்க.

விஜி அவனுங்க என்னை கடத்தினமாதிரி வேற யாராவது என்னைக் கடத்திட்டா...அடிச்சிப்பிடிச்சு பயந்து வருவாங்கதான, அப்போ சந்தனாகிட்ட சேர்த்திருவாங்கதான என்று திட்டம் போட, 

விஜிம்மாவோ தலையில் அடித்துக் கொண்டு,போடா நேரடியா உன் மாமானாரப் பிடி போதும் அதுதான் சரியான முறை, அவங்களைத் தான் நீ மரியாதையில்லாம பேசிட்டு வந்திருக்க... முதல்ல பெரியவங்ககிட்ட போய் மன்னிப்புக் கேளு...கிறுக்குத்தனமா எதாவது செய்து வைக்காத என்று அதட்டினார்.

ஒரு பிள்ளை அறிவாளியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்காதே என்று பொறுமியவன்... மாமானாரை எப்படி சமாளிக்க என்று யோசித்தவன், கடத்தல் பிளானையும் செயல்படுத்திப்பார்ப்போம் என்று திட்டம்போட்டுவிட்டு படுத்தான்.

இங்கு சந்தனா வீட்டிலோ அவள் கட்டிலில் படுத்திருக்க...அவளருகில்  அவர்களின் திருமண ஆல்பம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ரிஷியின் படத்தை தடவிவிட்டு...ஏன் உங்களை எனக்குப் பிடிச்சதுனு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது, ஆனா என் மனசுக்குள்ள இருந்து சொல்லிக்கிட்டே இருக்கு நீங்கதான் எனக்கு எல்லாம் என்று அது ஏன்னுத் தெரியலை...உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது, ஏன் ரிஷி அப்படித் தப்பா பேசுனீங்க..மனசுக்கு கஷ்டமாக இருக்கு என்று அழுதவளின் கண்ணீரை யாரோ துடைக்கின்ற மாதிரி உணர நிமிர்ந்து பார்க்க ஒருவருமில்லை, சந்தனா ரிஷிதான் வந்திட்டானோ என்று  பார்த்தாள், ஒருவருமில்லை என்றதும் ஏமாந்து போய்விட்டாள்... ரிஷி வரணும் என்று அவளது மனது ஏங்கத்தான் செய்தது.

அதே நேரத்தில் மாணிக்கவேல் வீட்டில் நள்ளிரவுக்கு மேல், யாரோ இருவர் அவரது மகள் ரிதன்யாவின் அறைக்குள் நுழைந்து, மயக்க மருந்து கலந்த துணியினால் தூங்கிக் கொண்டிருந்த அவள் மூக்கில் வைத்து அவளை மயங்க செய்திருந்தனர்.

அவள் நன்றாக மயங்கியதும் தூக்கிக் கொண்டு பாதுகாப்பு எல்லாம் தாண்டி வெளியே நின்றிருந்த அந்த கருப்புக்கலர் ஆடி காருக்குள்ளே படுக்க வைத்தவிட்டு, காரின் முன் பக்கம்  டிரைவர் சீட்டில் இருந்த ஒருவரிடம்.

நீங்க சொன்ன மாதிரியே செய்திட்டோம் சார் என்றதும்...பணத்தை கத்தையாக எடுத்து நீட்டினான். அதை வாங்கியவர்கள் இங்க பேசிய பணத்தைவிட அதிகமாகவே இருக்கு சார் என திகைத்து சந்தோஷப்பட்டனர்.

ரெண்டு பேரும் எந்த தடையமும் இல்லாமல் கொஞ்ச நாள் வெளியே போயிடுங்க. இதுல என் பெயர் எங்கேயாவது அடிப்படக்கூடாது புரியுதா? வெளியே தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? என்று கர்ஜித்தான்.

"தெரியும் சார் நாங்க உயிரோடு இருக்க முடியாது;  நாங்க எப்போவுமே உங்களுக்கு விசுவாசமா இருப்போம் சார்; எங்க வாயிலிருந்து எதுவுமே வெளியே வராது நீங்க நம்பி போகலாம்" என்றதும் கார் கண்ணாடியை ஏற்றிகொண்டவன் ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.

இந்த ரிதன்யாவை தூக்கிக் கொண்டு வந்த இருவரும் தங்களது பைக்கினை எடுத்து கார் சென்றதும், அதற்கு எதிர்ப்பக்கமாக கிளம்பிவிட்டனர்.

அடுத்த நாள் காலையில் மாணிக்கவேல் வீட்டில் பெண்ணைக் காணோம் என்று பதறித் துடித்து தேடிப் பார்க்க, எங்கே போனாள் என்று தெரியாது.உடனே போலீஸ் கம்பிளைண்ட் கொடுக்கப் போக.

விஷ்வேஷோ அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க. ஒருவேளை வேறு ஏதாவதுனா நமக்கு கேவலமா போயிடும். கொஞ்சம் பொறுமையா இருப்போம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவனின் மொபைலுக்கு ஒரு  வீடியோ வந்தது...

அதை ஓபன் செய்து பார்த்தவன் அப்படியே அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டான்; மாணிக்கவேல் உடனே அந்த மொபைலை வாங்கி பார்க்க அதில் அவரது மகள் ரிதன்யா மயங்கிய நிலையில் கார் சீட்டில் படுத்திருக்க கார் சென்று கொண்டிருந்தது.

இப்பொழுது புரிந்தது யாரோ தங்கள் வீட்டுப் பிள்ளையை கடத்தி இருக்கிறார்கள் என்று; யார் எனத் தெரியாமல் குழம்பிப் போய் நின்றிருந்தனர்.

மதிய வேளையில் ரிதன்யா கண்விழித்து பார்க்கவும் அது அவளது அறையல்ல என்று தெரிந்து பதறி எழுந்து சுற்றிப் பார்க்க, கதவு பூட்டப்பட்டிருந்தது வெளிப்பக்கமாக... கதவை வெகுநேரமாக தட்டவும், வெளியே இருந்து  திறந்துகொண்டு வந்தவனைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்...

நீங்க நீங்க சந்தனாவோட என்று நிறுத்தவும்...

அவனோ "அது நானேதான் பரவாயில்லையே இவ்வளவு மயக்கமருந்து எஃபெக்ட்லயும் தெளிவா இருக்கியே"

நீங்களா? மயக்கமருந்து வச்சா என்னைக் கொண்டு வந்தீங்க என்று அதிர்ந்து கேட்கவும்...

"ஆமா... நானே அது நானே" என்றவனைப் பார்த்து கண்ணீர்விட்டவள்"உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை"  என்று தன் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow