உறைபனி என்னில் பொழிகிறாய்-16

அத்தியாயம்-16
பத்மா நடந்தவைகளை சொல்லத் தொடங்கினார்...
எங்கம்மா பேரு சந்தனம்மாள்...என் தம்பி தனராஜ் பிறந்த பிறகு எங்கப்பா இறந்துட்டாங்க...நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் வளர்ந்தோம்...எங்கண்ணன் நாகராஜ் வேலைப் பார்துக்கிட்டே படிச்சான்...
சாப்பாட்டுக்குகூட ரொம்ப கஷ்டப்பட்டோம்...எந்த சூழ்நிலையிலும் எங்கம்மா எங்க மூணுபேருக்கும் இருக்கறது பகிர்ந்துதான் தருவாங்க பிள்ளைகளில் அவங்க எந்த வித்தியாசமும் பார்த்ததேயில்லை.
அண்ணன் சின்னதா ஆரம்பிச்சதுதான் இந்த பிஸினஸ்,இப்போ இவ்வளவு வளர்ந்திருக்கு...எங்க கல்யாணத்திற்கு முன்னாடியே அம்மா இறந்துபோய்ட்டாங்க...
இப்பவரைக்கும் நாங்க ஒற்றுமையாதான் இருக்கோம்...எங்கபிள்ளைங்களும் அதே மாதிரிதான்... யாருக்கும் அதிகமோ குறைவோ கிடையாது...எல்லாருக்கும் சொத்து,பாசம் எல்லாமே சமம்தான்.
எங்க எல்லாருக்கும் ஆண்பிள்ளைங்க பிறந்தது... ஒரு பெண்பிள்ளைகூட இல்லையே என கொஞ்சம் வருத்தமாக இருந்துச்சு...எங்கம்மா மாதிரி யாருக்காவது ஒரு பெண் பிறக்காதானு ஏங்கியிருந்தப்போதான்...ஜமுனா அண்ணி கர்ப்பாமானாங்க...
எங்க குடும்பமே ஒரு பெண் குழந்தைய எதிர் பார்த்திருந்தது...
ஆதவ்க்கும் வைபக்கும் அப்போ ஏழு வயசு ஓரளவு விவரம் தெரியும்...
ரித்திக், ரிஸ்வானுக்கு நாழு வயசு...எல்லோரும் தங்கச்சி பாப்பா வேணும்னு பேசிப்பாங்க...
வைபவ் எனக்கு தங்கச்சி பாப்பானா ...ஆதிக்கு யாரு அத்தை என்று கேட்டதும்...
"அதுவா அவனுக்கு கட்டிக்கபோறவ" என்று விளையாட்டாக சொன்னதுதான்...
ஆதி அப்போ பிறக்கப்போற பாப்பவதான் நான் கல்யாணம் பண்ணிக்கனுமா...என்று கேட்க...
ஆமாட பையா அது உன் மாமா பொண்ணுதான...உனக்குத்தான்டா முறைப்பொண்ணு. நீ தான் அவளுக்கு உரிமைபட்டவன் என்று சொன்னது அவன் மனதில் பசுமரத்தாணிபோல அப்படியே பதிந்து விட்டது...
எல்லோரும் எதிர்பார்த்த மாதிரியே பெண் குழந்தைப் பிறக்கவும்...மொத்தக் குடும்பமே கொண்டாடியது...
நாகராஜ் தன் அம்மாதான் தனக்கு மகளாகப் பிறந்துவிட்டார் என்று, அவரது நியாபகமாகவே சந்தனா என்று பெயரிட்டார்...
அவள்தான் அந்த வீட்டின் இளவரசி பாசத்திலும் அன்பிலும், கண்டிப்பும் மற்ற பிள்ளைகள் போலத்தான், ஜமுனா கண்டிப்புடன்தான் வளர்த்தார் பிள்ளைகளை...
அதிக செல்லம் என்பதால் குறும்பு செய்வாள், வாய்பேசுவாள் என்றால் அதுதானில்லை...எல்லோருடைய அன்பையும் உணர்ந்து வளர்ந்தாள்...
யாரையும் காயப்படுத்தாத பாசமிகு பெண்.
அவள் வளர வளர ஆதியின் நேசமும் வளர்ந்தது...அண்ணன்கள் அவளுக்கு துணையாக இருந்தால், ஆதி அவளது பாதுகாவலன்...
சந்தனாவுக்கு பத்து வயது என்றால் ஆதிக்கு பதினேழு வயது...அப்பவும் அதே அன்பும் நேசமும்தான் அவனிடமிருந்தது.
பள்ளியில் யாராவது எதாவது சந்தனாவிடம் வம்பிழுத்தால்கூட மறைத்துவிடுவாள்...தெரிந்தால் ரித்திக் இந்தபக்கம் கையில் கல்லெடுத்து விடுவான் என்றால்...அந்தபக்கம் ஆதி கராட்டே பிளாக் பெல்ட் அடி பின்னி எடுத்து விடுவான்.
அதனால் யாருக்கும் சந்தனாவிடம் நெருங்ககூட தைரியம் வரவில்லை.
சந்தனா படிப்பிலும் கெட்டிக்காரி...பண்பிலும் சிறந்தவள், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் அமைதியானப் பெண்.
ஆதிக்கோ இளமை பருவம் ஆரம்பித்து கல்லூரியில் சேர்ந்து இளங்கலை படித்து முடிக்கும்போதுதான் சந்தனா பெரிய பெண்ணாகினாள்...
ஹப்பா அது சந்தனாவின் அழகை இன்னும் மெருகேற்ற...
அவளது கருவண்டுக் கண்களின் பார்வையிலயே ஆதி என்ற காளை கட்டுண்டுக் கிடந்தது.
ப்ரணவ் தன் படிப்பை அமெரிக்காவில் படிக்க..அங்கயே சேர்ந்துப் படிக்க ஆதியையும் வைபவையும் அழைத்தும் வரவில்லை என்று மறுத்துவிட்டான்.
ஆதி சந்தனாவை விட்டு போகணும் என்பதற்காகவே இங்கயே முதுகலைப் படிக்கிறேன் என்று இருந்துவிட்டான்...அவனோடு சேர்த்து வைபவும் இங்கயே படிக்கிறேன் என்று இருந்துவிட்டான்.
ஒரு நாள் பால்கனியில் அமர்ந்திருந்த சந்தனாவின் அருகில் வந்து அமர்ந்த ஆதி... சந்தனாவையே இமை தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்...
சந்தனா அவனை பார்த்து" என்ன த்தான் இப்படி பாக்குறீங்க என்று தன் தலையை சரித்து கேட்டவளின், முகத்தை தன் இரு கரங்களாலும் பிடித்து...நெற்றியில் முத்தம் வைத்து...அழகா இருக்கடா" என்று அவளது கண்களைப் பார்த்து நின்றான்.
அவளுக்குள் அப்படியே எதுவோ உடைய...வெட்கம் வந்து தன் கண்களின் இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.
இப்போது மெதுவாக "போங்கத்தான் நீங்க என்னவோ பேசறீங்க...என்று அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிடவும்...அவளது கைகளைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன் சீக்கிரம் வளர்ந்திருடா...அத்தானால ரொம்ப வருசம்லாம் காத்திருக்க முடியாது...இப்பவே பாரு தாடியெல்லாம் வளர்ந்திட்டு என்று தாடியை தடவிக்கொடுக்க...
"சீக்கிரமா வளரலனா என்ன பண்ணுவீங்க"என்று கிலுக்கி சிரித்துக்கொண்டே கேட்க...
"ஒன்னும் பண்ணமாட்டேன்டி, அப்படியே உன்னை தூக்கிட்டு எங்கயாவது கண்காணாத தேசத்துக்கு போயிடுவேன்.உன் மடியிலயே வாழ்ந்து, உன்மடியிலயே செத்துறனும்டி...அவ்வளவு பிடிக்கும் இந்த மாமன் மகளை" என்று அவளது கன்னத்தை வருடி சொன்னவனின்...உணர்வுகள் புரியாவிட்டாலும், அவனது வார்த்தைகளும் முகபாவனையும் அவளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உணர்த்தியது...
நாளுக்கு நாள் ஆதியோ சந்தனாவின் மீது பைத்தியமானான். சந்தனா அவனது ஊணிலும் உயிரிலும் கலந்திருந்தாள்...
எல்லோருக்கும் அது தெரிந்துதான் இருந்தது...ஆதி எப்போதுமே நிதானம் தவறாத வளர்ப்புதான்...அந்த குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு அவசரக்காரன் ரித்திக் மட்டுமே...அப்போதும் இப்போதும் எப்போதுமே...
ஆதிக்கும் ரித்திக்கிற்கும் போட்டியே நடக்கும் யாரு சந்தனாவின் அருகில் உட்கார வேண்டும் என்று..சாப்பாட்டு அறையிலிருந்து டீவி பார்ப்பது வரைக்கும் போட்டி நடக்கும்...
சாப்பிடும்போதும் அவளுக்கு ஊட்டிவிடுவான் ஆதி...வைபவ்தான் டேய் அவ எங்க தங்கச்சிடா...எங்க முன்னாடியே அவளுக்கு ஊட்டிவிடுற என்று வம்பிழுப்பான்...
அன்று இப்படித்தான் அவசர அவசரமாக சாப்பிட அமர்ந்த சந்தனாவிற்கு ஆதி ஊட்டிவிடவும் சீக்கிரமா ஊட்டிவிடுங்கத்தான்...இன்னைக்கு எக்ஸாம் என்று அவசரமாக போக எத்தனித்தவளை அருகில் இருத்தி இட்லியை பிய்த்து ஊட்டிவிட்டுக்கொண்டே " ஒன்னும் அவசரமில்லை புருஷன் பொண்டாட்டில யாராவது ஒருத்தர் நல்ல படிச்சு புத்திசாலியாக இருந்தா போதும்டா..நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கற, உனக்கு வர்றது எழுது சரியா...உனக்கும் சேர்த்து நான் சம்பாதிக்குறேன்டா"என்றதும்...
ஏன் அத்தான் நீங்க பிறக்கும்போதே இப்படித்தானா...இல்லை பிறந்த பிறகு இப்படியா...எப்பவும் இப்படியே லூசு மாதிரியே உளறிட்டிருக்கீங்க என்றதும்...
மொத்தக் குடும்பமும் சிரித்தது...உனக்காக பேசினேன் பாரு என்னை சொல்லணும்...ஆதி உன் இமேஜை இவ எல்லார் முன்னாடியும் டேமேஜ் ஆக்குறாடா என்று தன்னைத்தானே விரலை நீட்டி பேசிக் கொள்ளவும்...
ரித்திக்கோ உனக்கு எதாவது இமேஜ் இருந்த மாதிரியே பேசுறீயே ஆதி...நீ என் தங்கச்சிக்கு பிடிச்ச வியாதி...என்று கலாய்க்க...
அவனை அடிக்க ரித்திக்கின் பின்னாடி ஆதி ஓட. அவனைப் பிடிக்க வைபவ் ஓட...ரிஸ்வானோ தன் தங்கையோட சேர்ந்து
சிரிக்க மொத்தக் குடும்பமும் மிகவும் சந்தோஷமாக இருந்தது...யாரு கண் பட்டதோ அடுத்த நாளிலிருந்து ஆதி, வைபவ், கேசவ் என்று மூன்றுபேரும் தங்களது குடும்ப தொழிலில் கால் வைத்தனர்...அங்குதான் பிரச்சனையின் ஆணிவேர் முளைக்க ஆரம்பித்தது.
அங்கு சிலதொழில்களில் மட்டுமே பங்குதாரராக இருந்த மாணிக்கவேலின் நிர்வாகம், அவரது மகனின் கையிலிருந்தது...அதில் நிறைய குழப்படி இருந்தது...அதை ஆதியும் வைபவும் கண்டுபிடித்துவிட்டனர்.அதனாலயே ஆதிக்கும் விஷ்வேஷிற்கும் மறைமுக பகை உண்டாகி வளர்ந்தது.
இப்போது சந்தனா கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தாள்...அவளது அழகிற்கும்,அந்த கண்ணிற்குமே அவளைப் பார்த்தமாத்திரத்தில் இளைஞர்கள் மயங்கி அவள் பின்னாடி வந்தால், அடுத்த நாளே அவளது அண்ணன் பட்டாளம் வந்திறங்கும்போது தெறித்து ஓடிவிடுவர்.
தான் அழகி என்ற எண்ணமோ, தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற கர்வமோ அவளிடம் இருக்காது...தன் படிப்பை அவள் தொடர, அவளை ஆதி தொடர என்று வாழ்க்கை போய்
கொண்டிருக்கும்போதுதான்...
முதன் முதலாக சந்தனாவிற்கு மெது மெதுவாக ஆதியைக் காணும்போது ஒரு பட்டாம்பூச்சி மனதில் பறக்க ஆரம்பித்தது.
தான் எப்படி இருக்கிறோம் என்று முதன் முதலாக கண்ணாடியைப் பார்த்து ரசிக்க கற்றுக்கொண்டாள்...
அன்று இப்படித்தான் காலையில் எல்லோரும் சாமி கும்பிட நிற்கும்போது ஆதி அருகில் வந்து நின்றதும்,சந்தனா மெதுவாக அவனை உரசி நிற்க...ஆதிக்கா அவளைத் தெரியாது...பிறந்ததிலிருந்து அவளை உணர்கின்றானே...கள்வனும் கண்டுக்கொண்டான்.
ஓரக்கண்ணில் அவளைப் பார்த்தவன் என் மாமான் பெத்த சித்திரமே...இந்த நாளுக்காகத்தானடி நான் காத்திருக்கேன்...என்று நினைத்தவன். மெதுவாக அவளிடமிருந்து லேசாக விலகி நிற்க...அவள் மறுபடியும் அவனை ஒட்டி நின்றுக் கொண்டாள்.
அவனுக்கு ரொம்ப சந்தோஷம் நேராக ஆபிஸிற்கு சென்றதும், வைபவின் கேபினிற்குள் நுழைந்து..அவனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்து விடுவித்தான் ஆதி...
வைபவ் அதிர்ச்சியாகி" அடேய்...என்னடா நினைச்சிட்டு முத்தம் குடுத்த...ச்சீ அவனா நீ? என்றுக் கேட்க...
மச்சான் எனக்கு என் ஆளுகிட்ட இருந்து இன்னைக்கு சிக்னல் வந்துட்டுடா...நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மச்சான் என்று சந்தோஷத்தில் பேசியவனைப் பார்த்த வைபவ்....
"அடேய் கிராதகா யாருடா அந்த உன் ஆளு?எங்க பாப்பவதானடா கட்டிக்குறேனு சொன்ன... இது யாருடா புதுசா என்று கோபத்தில் காது விடைக்க கேட்டவனை ..
"லூசாடா நீ...இந்த ஜென்மத்துல என் ஆளு, என் டார்லிங்,என் உயிர் எல்லாம் என் மாமன் மக மட்டுந்தான்டா...நீ அவளுக்கு அண்ணன் தான ட்யூப்லைட் லேட்டாதான் எறியும்" என்று அவனது தலையில் தட்டினான்...
"ஓஓஓ" என்று கேட்டவன்...என் தங்கச்சியத்தான் உன் ஆளுனு சொன்னீயா? அப்போ அப்பாகிட்ட பேசிட வேண்டியதுதான் இன்னைக்கே...என்று வைபவ் சொல்லும்போது...
"ஐயா ராசா, நீ பேசாமா இருந்தாலே போதும் நீ ஒன்னுமே பண்ணவேண்டாம்...நானே பார்த்துக்குறேன்...ப்ரணவ் அத்தானுக்கு கல்யாணம் முடியட்டும்...நாங்க அதுவரைக்கும் திகட்ட திகட்ட லவ் பண்ணிக்கிறோம்...இப்போ போய் வேலைய பாரு...வெட்டியா அரட்டை அடிக்காத..போ போ" என்று வைபவை விரட்ட...
அடேய் நான் எங்கடா பேசவந்தேன்? நீ தானாட என் கேபின்ல வந்து பேசிட்டிருக்க...போடா போ காதல் பைத்தியம் முத்திட்டு, எங்க வந்திருக்கோம்? எங்க நிக்குறோம்னுக் கூட தலைகால் புரியலையா உனக்கு?...எங்க பாப்பா பாவம்டா என்று சிரிக்க...
டேய் நான் ஆதிடா...உங்க வீட்டு மாப்பிள்ளைடா...மரியாதைக்குடு இல்லை அவ்வளவுதான்.
போடா டேய்..போய் வேலையப் பாருடா டேய் என்று வைபவ் சொல்லவும்...
மரியாதை தெரியாத குடும்பத்துல பொண்ணு எடுக்கணுமானு நான் யோசிக்க வேண்டியதிருக்கும்...பார்த்துக்க.
நால்லா யோசிடா...இப்படி வாயடிக்குற உன்கிட்ட இருந்து எங்க பாப்பா தப்புச்சிட்டானு நினைச்சிப்போம்...
ச்ச்...ச்ச..அசிங்கப்பட்டான் ஆதி
ஆதி இந்த கேவலம் உனக்குத் தேவையா? தேவையா? என்று கேட்டவன்...நான் என் கேபின் போறேன் என்று கிளம்பிவிட்டான்...
டேய் டேய்...அந்த மானம் ரோசம் அது எல்லாம் என்னாச்சுடா? என்று வைபவ் கத்திக்கேட்க...
அதுவா என் சந்துக்குட்டி காலடில போட்டு மிதிச்சிட்டடா...என்று பதில் கொடுத்துக் கொண்டே சென்றான்.
அன்று மாலை வீட்டிற்கு வரும்போதே சந்தனாவுக்கென்று ஒரு பரிசு பொருள் வாங்கி வந்திருந்தான்.
ஆதி எப்பவுமே அதிகம் பேசுவான், பத்மா எப்பவும் சொல்லுவார் ஆண்பிள்ளைங்க ரொம்ப பேசக்கூடாதுடா...அளவா பேசணும் சும்மா கெத்தா இருக்கணும்டா...உன் இரண்டு மாமன்கள பாரேன்,உங்கப்பாவும் அப்படித்தான்...ப்ரணவும் அப்படித்தான்...
அம்மா எதுக்கும் விதிவிலக்கு உண்டுமா...நான் இப்படியே இருந்துட்டுப் போறேன் என்று அவரது மடியில் படுத்துக் கொண்டே பேச...
ஆமா இன்னும் அம்மா மடியில படுத்திட்டு பேசிட்டிருக்கப்பாரு...நீயெல்லாம் ஒரு கம்பேனியில டைரக்டர் என்று வைபவ் ஆதியை நக்கலா கேட்க..
எத்தனை வருசமான என்ன? எவ்வளவு வளர்ந்தா என்னடா? எங்கம்மாவுக்கு நான் பிள்ளைதானடா? போடா டேய் உனக்கு பொறாமை, அங்க அத்தை மடியில என் டார்லிங்க் படுத்திருப்பா, அதான என்று பேசிக்கொண்டிருக்க, மொத்தக் குடும்பமும் அங்கிருந்தனர்...
அந்த நேரத்தில் தான் ப்ரணவ் போன் செய்து அவனது காதல் கதையை சொல்ல...அதைக்குறித்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என்ன செய்யலாம் என்று...
இங்கோ சந்தனா எழும்பி போகவும் அவளது பின்னாகவே சென்ற ஆதி...மாடியில் வைத்து அவளது முன்னபாக போய் நின்று வழிமறிக்கவும்...திடுக்கிட்டு பயந்து...
என்ன த்தான் நீங்க இப்படியா பயமுறுத்துவீங்க என்று நெஞ்சில் கைவைத்து நின்றவளை...அப்படியே அலேக்காக தூக்கி மொட்டை மாடிக்கு கொண்டு செல்ல..
"ஐயோ த்தான் என்ன பண்றீங்க"
"கடத்திட்டு போறான்டா உன்னை"
யாரு நீங்க? என்னைய? நடக்குறத பேசுங்க...காலையில பக்கத்துல நின்னதுக்கே தள்ளிப்போய்ட்டீங்க..
நீங்களாவது என்னை கடத்துறதாவது...
போங்க போய் பிள்ளைக்குட்டிகள படிக்க வைங்க என்று டயலாக் விடவும்...
அதுக்குத்தான்டி இங்க கடத்திட்டு வந்திருக்கேன்...அண்ணனுங்களாடி அவனுங்க...
மச்சானும் தங்கச்சியும் தனியா இருக்கட்டுமேனு விடுறானுங்களா பாரு...இவனுங்களாம் கல்யாணம் பண்ணி நம்ம கல்யாணம் நடக்குறதுக்குள்ள...
நரைச்சிடும் வா நம்ம ஓடிப்போகலாம்?
" போவடா போவ..." என்று பின்னாடியிருந்து
வைபவ் வந்தான்...
ஆதி தலையில் கைவைத்து டேய் அசிங்கம் பிடிச்சவனே...லவ் பேர்ட்ஸ் இரண்டுபேரும் தனியா இருக்கமே. கொஞ்சமாவது இங்கிதம் தெரியாத உனக்கு...எப்படிடா மோப்பம் பிடிச்சு வந்தீங்க...கடவுளே இந்த நொண்ணங்காரங்க கிட்டயிருந்த என்னை காப்பாத்துங்க...எங்க போனாலும் ஒட்டுக் கேக்குறானுங்க என்று வேண்டுதல் செய்ய...
வாயக் குறைடா வாயக்குற...உன் வாய்தான்டா உன் எதிரி என்று வைபவ் ஆதியை குறை சொல்ல...
சந்தனா தன் வாயை மூடி சிரிக்க...
" மச்சான் கொஞ்சம் கருணை காட்டுடா தனியா பேசிட்டு வர்றேன் என்று கெஞ்ச...அது உங்க கல்யாணத்துக்கு அப்புறமா பேசிக்கோங்க...ப்ரணவ் அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் உங்க கல்யாணத்தை நடத்த பெரியவங்க பேசி முடிச்சிட்டாங்க..அதை சொல்றதுக்குத்தான் வந்தேன் என்று வைபவ் சந்தோஷத்தோடு ஆதியை கட்டிக்கொண்டான்.
இவ்வளவு சீக்கிரமாவா? சந்து படிப்பை முடிக்கலையேடா?
அது கல்யாணத்துக்கு பிறகு படிச்சிப்பாடா..நீ ஏன் டென்சனாகுற...என்று அவன் ஆறுதல் சொன்னான்.
ப்ரணவ் அவனோட படிக்கின்ற கோவா பிஸினஸ்மேனோட பொண்ணான நேகாவை காதலிக்க...அதற்கு அவளது குடும்பத்தில் எதிர்ப்பு..அதனால் அவளை அழைத்துக் கொண்டு நாளை ப்ளைட்டில் இங்கு வருகின்றான், உடனே பதிவு திருமணமும்...அடுத்தவாரமே முறைப்படியான திருமணத்தையும் முடிக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது...
அதில்தான் நாகராஜ் தப்பு செய்துவிட்டார்...மாணிக்கவேல் குடும்பத்தை அழைத்தார்...ப்ரணவின் திருமணத்திற்கு.
திருமணத்தன்று சும்மாவே அழகியான சந்தனா அன்று தேவதையாக ஜொலிக்க...மாணிக்கவேலோடு அவரது குடும்பமும் வந்தது.. .அவரது மகன் விஷ்வேஷ் மற்றும் இளைய மகள் ரிதன்யாவும் வந்திருந்தாள்...
மேடையில் பெண்ணின் அருகே நின்றிருந்த சந்தனாவைப் பார்த்தவன், அப்படியே உறைந்து நின்றான்...என்ன பொண்ணுடா இவ! எவ்வளவு அழகா இருக்கா! என்று வாயத்திறந்து சொல்லவும், பக்கத்தில் நின்றிருந்த ரித்திக் அதைக்கேட்டு, யார சொல்றான் என்று பார்க்க தன் தங்கையைதான் என்றதும் கோபம் வர அவனை திரும்பி திட்டுவதற்குள்...
நாகராஜ் அவசரமாக வந்து
"வாங்க வாங்க என்று மரியாதையாக அழைத்து செல்லவும்தான், அப்பாவோட கெஸ்ட்டா போயிட்டான்...இல்லைனா நடக்குறதே வேற என்று கோபத்தில் இருந்தவனது, மனது இப்போது வந்திருந்தவங்களை கவனிப்பதில் திரும்பியது...
ஆனாலும் அவனை கண்காணிக்க தவறவேயில்லை..அவனது பார்வை தன் தங்கையின் மேல்தான் இருக்கின்றது என்றதும்... அவனை அன்றிலிருந்தே பிடிக்கவில்லை கூட வந்தவங்களையும் பார்க்கவேயில்லை...ஆனால் ரிதன்யா ரித்திக்கை கவனித்திருந்தாள்.
இரண்டு நாட்கள் கடந்து மாணிக்கவேல் தன் மனைவி மகனுடன் கையில் தாம்புலத் தட்டோடு வந்திருந்தார் சந்தனாவைப் பெண்கேட்டு.
What's Your Reaction?






