உறைபனி என்னில் பொழிகிறாய்-9

அத்தியாயம்-9
காரில் சொகுசாக படுத்திருந்தான் ரிஷி...அவன் இருந்த காருக்கு முன்னாடி ஒரு கார் செல்ல... பின்னாடி ஒரு கார் பின் தொடர்ந்தது...
லேசாக இப்போது விழிப்புதட்ட கண்களை திறக்கமுடியாமல் திறந்து மெதுவாகப் பார்த்தவனுக்கு, கார்ல இருக்கோம் என்கின்ற உணர்வு வர சட்டென்று எழும்பியவன், நேத்து நம்ம மாடியில் இருந்து இறங்கதான செய்தோம், அதுக்குள்ள காருக்குள்ள எப்படி, காலையில முகூர்த்தம்னு விஜி சொன்னாங்களே! பலவித எண்ணங்கள் வந்துப்போக, தலையைப் பிடித்துக் கொண்டான்...
இது என்ன கனவா என்று விழித்தவனுக்கு, என்ன நடக்குது என்று புரிவதற்கே கொஞ்சநேரம் ஆகிற்று...
திரும்பி பார்க்க அது ஒரு பெரிய கேரவேன் மாதிரி எல்லாமே இருந்தது...பக்கத்தில் அவனை சுற்றி நான்குபேரு நல்ல பாடிபில்டர்ஸ் மாதிரி இருக்க...
யாருடா நீங்களாம் என்னை எங்கடா கூட்டிட்டுப் போறீங்க? என்றுக் கேட்டவன், இப்போதுதான் அதிர்ச்சியாகி...
டேய் என்னை கடத்திட்டா போறீங்க...ஐயோ விஜி எனக்காக பணம்லாம் கொடுக்கமாட்டாங்கடா? நீங்க இவ்வளவு பெரிய வண்டிவச்சு கடத்தக்கூடியளவுக்கு நான் வொர்த் இல்லைடா...என்று சத்தம் போட்டவனை...
" நீங்க அதுக்கு வொர்த் இல்லைனுத் தெரியும் சார். அடங்கி ஒழுங்கா இருங்க சார்...உங்களை நல்லாப் பார்த்துக்கச் சொல்லிருக்காங்க...இல்லைனா அடிச்சு மூஞ்சு உடைச்சிடுவோம்"
இவ்வளவு செலவு பண்ணி என்னை கடத்த சொல்றளவுக்கு யாரா இருக்கும்? ஐயோ அங்க விஜி என்ன பண்ணி வைக்கப்போகுதோ...டேய் கொஞ்சம் போனாவது தாங்கடா எங்கம்மாகிட்ட பேசணும்...
பக்கத்தில் இருந்தவன் "இவன் என்னடா சின்னபிள்ளைங்க மாதிரி அம்மாகிட்ட பேசணும் ஆயாகிட்ட பேசணும்னு சொல்றான்...நம்ம வாழ்க்கையில கேவலமானக் கடத்தல்டா...துட்டு நிறையக் கிடைக்குதுனு வந்திட்டோம்டா....இவனுக்குலாம் இந்த வண்டிலாம் அதிகம்டா...
ரிஷி "இதைத்தான் முதல்லயே சொன்னேன்...என்னை தஞ்சாவூர்லயேக் கொண்டு விட்ருங்கடா..புண்ணியமா போகும் நானே பலப்பிரச்சனையில இருக்கேன்டா"
ரிஷியை மேலயும் கீழயும் பார்த்தவன்"ஒரு கோடி ரூபாய் இப்பவே தா..சாயங்காலத்துக்குள்ள உன்னை தஞ்சாவூர்லக் கொண்டு விட்ருதோம்"
என்ன ஒரு கோடி ரூபாயா? நீங்க யாரோயோ கடத்துறதுக்குப் போய் தப்பா என்னையக் கடத்திருக்கீங்க ப்ரதர் என்னைய இறக்கிவிடுங்க...
"உன் பெயர் ரிஷிதான"
"ஆமா"
" என்.சி.பிரவைட் லிமிடெட்ல தான வேலைப் பாக்குற"
"ஆமா"
அப்ப ஆள் கரெக்ட்தான்...இந்தா டீ குடி...உன்னை பத்திரமா கொண்டு வரச்சொல்லி உத்தரவு. இந்தா உள்ளப்போய் உன் முகத்தை கழுவிட்டு வா.
நீ ஒரு மாதிரிதியா இருந்தா எங்களை கொன்றுவானுங்க...என்று சொல்லவும்.
இது என்னடா புதுவிதமான கடத்தலா இருக்கு...மாப்பிள்ளை மாதிரி ட்ரீட் பண்றானுங்க...என்று எழும்பி போனவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர்ந்தான்...
இருக்க குழப்பத்துக்கு என்ன செய்யனுத்தெரியாமல் அமைதியாக இருந்தான்...ஒருபக்கம் கல்யாணம் நின்றது சந்தோஷமே என்றாலும் தன் அம்மாவை நினைத்து கலக்கம் வரத்தான் செய்தது...இப்படி எங்க கடத்திட்டு போறானுங்க கடைசியில என் ஏஞ்சல் பார்க்கமலயே போயிடுவனோ?
காதலிச்சு முத்தம் வரைக்கும் தானடா வந்திருக்கேன்...எவனுக்குடா அது பொறுக்காம போச்சுது...என்று மனதிற்குள் புலம்பியபடியே வந்தவன்....தன் தலையைபிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சரியா ஒரு அரைமணி நேரத்தில் வண்டி எங்கோ நிற்பதைக் கவனித்தவன், அலர்ட்டா இருடா ரிஷி இறங்கினதும், எந்த ஏரியானுப் பார்த்து ஓடி தப்பிச்சிரு என்று தயாராக இருக்க...
ரிஷி இறங்கவும் அவனின் கைப்பிடித்து "வெல்கம் மாப்பிள்ளை" என ஒருவன் கைகுலுக்க...
யாரென்று ரிஷிக்குத் தெரியவில்லை...அறியாதபாவனை காண்பிக்க... அவன் மெதுவாக சிரித்தான்.
அப்போது பின்னாடி இருந்து வந்த காரிலிருந்து கேசவ், வைபவ் இறங்க...இப்போது புரிந்தது யார் கடத்தினர் என்று...
அவன் திரும்பி பார்க்க"ஹலோ மாப்பிள்ளை நான் ரித்திக், என்னை நீங்க பார்த்திருக்க வாய்பில்லை..சந்தனாவோட கடைக்குட்டி அண்ணன்"
வாங்க என்று அவனது கையைப் பிடித்து அழைத்து செல்ல எத்தனிக்க..எதுக்கு இந்தக் கடத்தல்?
அங்க என் குடும்பமே துடிச்சிட்டிருக்கும்,
என்னை காணலைனு. அதுல வேற விஜி என்னப் பண்ணி வச்சிருக்காங்களோ என்று சத்தம் போட்டவனின் அருகில் வந்த ரித்திக்"அப்போ எங்க தங்கச்சி அழறதுல உனக்கு வருத்தமில்லை...அவளை ஓரு நிமிஷமாவது நினைச்சுப் பார்த்தியா...இன்னொருத்தி கழுத்துல எப்படி தாலிக்கட்ட சம்மதிச்ச...நீ இல்லைனா உயிரோடவே இருக்கமாட்டா. அவளைப்பத்தி உனக்கு கவலையே இல்லையா" என்று சீற...
பதில் சொல்லவியலாது அமைதியாக தலைக் கவிழ்ந்து நிற்கவும், அவனது கையைப்பிடித்து, அழைத்துக் கொண்டு அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு சென்றனர்... அங்கு எல்லாமே தயாராக வைக்கப்பட்டிருந்தது பட்டு வேட்டி சட்டை,மாலை சகிதம்...
இப்போது கேசவ் ரிஷியிடம் குளித்து இதெல்லாம் போட்டுட்டு வாங்க, முகூர்த்த நேரம் பத்து மணி சீக்கிரம் என்றதும்...
ரிஷியோ சிறிது ஆதங்கபாபட்டவனாக "நீங்க இப்படி என்ன கடத்திட்டு வந்துட்டீங்க; அங்க தஞ்சாவூரில் என் குடும்பம் என்ன நிலைமையில் இருக்குனு எனக்கு எப்படி தெரியும்; நான் கல்யாணம் பண்ணிக்க இருந்தது மாமா பொண்ணு மொத்த குடும்பமும் இப்ப என்ன தேடி அலைஞ்சு இருப்பாங்க; இந்த நிலைமையில் நான் எப்படி கல்யாணத்தை சந்தோஷமா பண்ண முடியும்... இதையெல்லாம் யோசிக்க மாட்டீங்களா?
எப்படி யோசிக்க சொல்றீங்க? நீங்க உங்க அம்மாவுக்காக அந்த வித்யாவை கல்யாணம் பண்ண சம்மதிச்சது வரைக்கும் எங்களுக்குத் தெரியும்...என்று ரித்திக் கோபத்தில் பேசவும்...
ரிஷியோ "புரியாம பேசாதீங்க ரித்திக் குடும்ப உறவுகளில் சிக்கல் இல்லாமல் தான் பாத்துக்கணும்... எல்லா வேலையும் செய்து வைத்தது எங்க அம்மா .யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாம அமைதியா எல்லாத்தையும் முடிக்கணும்... அதுக்கு தான் சம்மதிச்சேன்.
ரித்திக்" எப்படி? விடிஞ்சா வித்யா கழுத்தில் தாலிக்கட்டினப் பிறகா, இரண்டாவதா என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சியா? இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணக் கூடிய அளவுக்கு என் தங்கச்சி கேவலமா போயிட்டாளா உனக்கு... என் தங்கச்சி விஷயமாக இருக்க போய்தான் உன்னை எல்லாம் நிக்க வச்சு பேசிட்டு இருக்கோம்... இல்லன்னா நீ இருக்கற இடமே தெரியாம பண்ணிடுவேன்"
" டேய் ரிஷிய பத்தி என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க, ஆளாளுக்கு எகிறுரீங்க, சந்தனாவுக்காகத் தான் பாக்குறேன்... இல்லன்னா இப்படி நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன்" என்று ரிஷியும் கோபத்தில் கத்திப் பேச...
கேசவ்தான் என்னங்கடா இந்த நேரத்துல சண்டைப் போட்டுட்டு...ரித்திக் சும்மாயிருடா...அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை என்று ரித்திக்கை சமாதானப்படுத்தினான்.
ரிஷி கேஷவைப் பார்த்து புரிஞ்சுக்கோங்க இந்த சூழ்நிலையில நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறது...என்று நொந்துப் போய் நிற்க...
கேசவ் தனது போனிலிருந்து யாருக்கோ அழைக்க.அது வீடியோ கால், அதில் சந்தனாவின் முகம் தெரியவும் ஒரு நிமிடம் ரிஷி அப்படியே அவளைப் பார்த்து கொண்டு நின்றிருந்தான்...
சந்தனா ரிஷி என்னமோ பேசணும்னு சொல்றாங்க என்று கேசவ் சொல்லவும்" ரிஷி" என்று அழைக்கவும் அப்படியே உருகிதான் நின்றான்...
உடனே சந்தனா"அண்ணா வேண்டாம்னா ரிஷியை கம்பெல் பண்ணாதிங்க, அவங்கம்மா விருப்ப ப்பட்டபடியே வித்யாவையே கல்யாணம் செய்திட்டு சந்தோஷமா இருக்கட்டும்...எனக்கு எதுவும் வேண்டாம்னா" என்று தன் முகத்தை கைகளால் மூடி அழ ஆரம்பித்துவிட்டாள்...
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷியோ ஒன்றுமே சொல்லாது, வாஷ்ரூம் சென்று குளித்து வந்து, உடைகளை படபடவென எடுத்துப்போட்டவன் தயாராகி வந்தான்...
அவனை அழைத்துக்கொண்டு மண்டபம் சென்றனர்...
முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்...
ரிஷியை அழைத்துக் கொண்டுப் போய் மணமேடையில் அமரவைத்ததும்...
அப்படியே ஐயர் எல்லா செய்முறைகளும் செய்துக் கொண்டிருக்கும்போது மணமகளான சந்தனாவை அழைத்து வந்து அவனது அருகில் அமர வைக்கவும்,
ஒரு நொடி அவளைத் திரும்பி பார்த்தான், ரொம்ப அழுதிருப்பாள் போல என்னோட விசயம் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்காணுங்க சரிதான்...அதயேன் இவக்கிட்ட சொல்லணும், லூசுங்க, அவளையும் கஷ்டப்படுத்திருக்கானுங்க என நினைத்தவன்...
அவளது கண்களில் கண்ணீர் முட்டி நிற்க...மெதுவாக அவளது கைகைளைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்...
எல்லாரும் தாலியை ஆசீர்வதித்து கொடுக்க, வாங்கி ஒரு நிமிடம் யோசித்து அவன் தன்னுடைய சொந்தங்கள் எதுவுமே இல்லாமல் தன்னுடைய திருமணமா என்று மனம் வலிக்கத்தான் செய்தது... ஆனால் அவன் எதிரில் இருப்பவளின் முகத்தை பார்க்கும் பொழுது, வாழ்க்கை நமக்கு இப்படித்தான் கல்யாணம் நடக்கும் என வச்சிருக்கு போல என மனதிலே ஒரு நிமிடம் பேசிக்கொண்டு...இன்பமும் துன்பமும் வாழ்வும் சாவும் இனி இவளோடுதான் என்று மனதில் உறுதி கொண்டு தாலியை அவள் கழுத்தில் கட்டினான்...
நாத்தனார் முடிச்சை ப்ரனவ் மனைவி போட்டுவிட்டாள்.
எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்ததும் நாகராஜ் - ஜமுனா தம்பதியின் காலில் விழுந்து எழும்பினர்...அடுத்து தன் அத்தை மாமாவின் காலில் விழவும் அவர் அழுதேவிட்டார்...அப்படியே என் கண்ணே என்று சந்தனாவைக் கட்டிக்கொண்டு நல்லாயிருடா...ஆசிர்வாதம் செய்தார்.
பத்மா அழவும் எல்லோரும் ஒட்டுமொத்தமாக அத்தை என்று கத்தினர்...
இது ரிஷிக்கு வித்தியாசமாகப்பட உடனே தனது கண்களை துடைத்துக் கொண்டார்.
சுபகாரியங்கள் எல்லாம் முடிந்து வந்திருந்த நெருங்கிய சொந்தங்களும் சென்றிருக்க ரிஷி மெதுவாக சந்தனாவின் காதில் ஏதோ செல்லவும் அவளும் சரி என்று தலை அசைத்தாள்...
நேராக தனது தந்தையிடம் சென்று பேசியவள் ரிஷியிடம் வந்து "இன்னைக்கு வேண்டாம், இப்போதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு நாளைக்குப் போகலாம்னு சொல்றாங்க"என பயந்து பயந்து சொல்ல...
ரிஷி இப்போது நேராகவே தனது மாமனாரிடம் சென்றவன்"இதுவரைக்கும் நீங்க சொன்னதெல்லாம் கேட்டேன்னா அதுக்கு காரணம் சந்தனா, அதுவுமில்லாம என்மேலயும் தப்பிருக்கு அதனாலதான்...
இப்போ சந்தனா என் மனைவி...நான் தஞ்சாவூர் போகணும் அங்க எனக்கு என்னவாயிட்டோனு பயந்திருப்பாங்க...
அதுவும் அங்க ஒரு பொண்ணு எதிர்பார்த்திருந்த அவளது எதிர்கால வாழ்க்கையே இல்லாம போயிருக்கு... எல்லாத்தையும் சரி செய்யுறப் பொறுப்பு எனக்கிருக்கு...ஒரே இராத்திரியில என்னை தூக்கிட்டு வரத்தெரிஞ்ச உங்களுக்கு, எங்களை தஞ்சாவூர் அனுப்புறது அவ்வளவு பெரிய விசயமில்லை...நீங்க அனுமதிச்சாலும் இல்லைனாலும் நானும் என் மனைவியும் போறோம் என்று கிளம்பினான்.
அவன் சந்தனாவின் கையைப் பிடித்து மண்டபத்தின் வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.தலையில் கைவைத்தவன் சந்தனாவைப் பார்த்தான், சந்தனாவிற்கு இப்போது தான் லேசாக சிரிப்பு வந்தது...
வெளியே ஆளுக்கொரு காரோடு ஐந்து அண்ணன்களும் நின்றிருந்தனர்...
இப்போ எந்தக் கார்ல போறது அதையும் உன் பாசமலருங்ககிட்ட கேட்டு சொல்லு என ரிஷி சந்தனாவிடம் கூறவும்...பின்னாடியே பெரிய கார் வந்து நின்றது, அதுவும் அலங்காரத்துடன் இருவரின் பெயர் எழுதி, பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருந்தது...
ரிஸ்வான் தான் ரிஷியின் அருகில் வந்து வாங்க இரண்டுபேரும் இதுலயே தஞ்சாவூர் போகலாம்.நாங்க எல்லோரும் உங்ககூட வர்றோம் என்றான்...
ரிஷிக்கு இப்போதிருந்தது வேறு கவலை "விஜியை எப்படி சமாளிக்கறது, இரண்டு மாமாக்களும் என்ன சொல்லப் போறாங்களோ, வித்யா என்ன நிலையில் இருக்காளோ பாவம், என்று தாய்க்கு ஏற்ற தனையனாக யோசித்தான்...
இப்போது காரில் ஏறி அமர்ந்தான் ;அவனது அருகில் அவனது காதல் மனைவி அமர்ந்திருக்க அந்த காரில் புதுமணத் தம்பதிகள் மட்டுமே..முன்னும் பின்னும் ரிஷியின் மச்சான்களின் கார் வந்தது...அவன் எங்கயும் தப்பவும் முடியாது...ஓடவும் முடியாது.. ஒழியவும் முடியாது....
ரிஷி இரவு முழுதும் நல்ல மயக்கத்தில் இருந்ததால் இப்போது தூக்கம் வரவில்லை...அவளுக்கோ இப்பொழுது தூக்கம் வந்தது.
அவனது தோளில் சாய்ந்து அப்படியே தூங்கியவளைப் பார்த்தவனுக்கோ மனதில் பாரம் வந்தது...
எப்படியும் என் கல்யாண விசயம் தெரிஞ்சு தூங்கியிருக்கமாட்டாள்,அழுதிருப்பா..மூணு நாள் ஊருக்குப்போறேன் சொன்னதுக்கே அர்த்தராத்திரி தேடி வந்தவ, இப்போ வாழ்க்கை முழுக்க நான் இல்லைனா எப்படி துடிச்சிருப்பாளோ? கண்களில் நீர் கட்டியது, ஆணாக இருந்தாலும் மனதிற்கு பிடித்தவள் வேதனைப்படும் போது அன்பின் கண்ணீர வெளிப்படத்தான் செய்யும்...
தோளில் சாய்ந்திருந்தவளை அப்படியே தன் மடியில் சாய்த்து கால்களை நீட்டி படுக்க வைத்தான்...
உன் பாசமலர்கள் வரலைனாலும் நான் வித்யா கழுத்துல தாலி கட்டியிருக்கமாட்டேன்டி...என்று அவளது கன்னத்தில் உதட்டினை ஒற்றி எடுக்க , அதை உணர்ந்தவள் போல தூக்கத்திலயே சிரிக்க, சொக்கன் சொக்கித்தான் போனான்.
இடையில் ரிஷிக்கு அழைத்த ரிஸ்வான் சாப்பிட எங்க நிப்பாட்டனும் என்று கேட்க...இது என்னடா புதுசா இருக்கு என்கிட்ட கேட்குறானுங்க...
"உங்களுக்கு எங்க தோணுதோ அங்கயே நிப்பாட்டுங்க...சந்தனா தூங்குறா"
"ஓஓ இருங்க நான் அண்ணாங்ககிட்ட கேட்டுச்சொல்றேன்"
ம்ம்...க்கும் இது வேறயா, என்னவோ செய்து தொலைங்க, இவனுங்க ஐஞ்சு பேரும் இனி டிஸ்கஸ் பண்ணி..விடிஞ்சிடும் என்று எண்ணியவன்...கண்களை மூடி தூங்க முயற்சிப் பண்ணினான்...
ஒரு மணிநேரங்கழித்து வண்டியை நிறுத்தி வேண்டாம் என்று சொன்ன ரிஷியையும், சந்தனாவையும் எழுப்பி வலுக்கட்டாயமாக அழைத்து சென்று சாப்பிட வைத்தனர்...
தனியாமாட்டின சந்தனாவிடம் "உங்கவீட்ல உள்ளவங்க பிறக்கும்போதே இப்படியா? இல்லை ஒருத்தரைப் பார்த்து, குணத்தை மாத்திக்கிடுவீங்களா?"
என்ன சொல்றீங்க, ஒன்னும் புரியலை என்று கண்களை உருட்ட? அவனுங்க தங்கச்சித்தான உனக்கு எப்படி புரியும், அப்படித்தான் இருக்கும் நீ சாப்பிடுமா? என்றான்.
இப்போதும் ரிஸ்வான் வந்து "அத்தான் நல்ல சாப்பிடுவீங்களாம், அங்க என்ன சூழ்நிலை இருக்குனுத் தெரியாது, சமாளிக்கணும்ல அதான்"
ரிஷி தலையாட்ட, சந்தனா" சரிண்ணா" என்றாள்...சாப்பிட்டு முடித்து கிளம்பினர்...
தஞ்சாவூர் வந்து சேர மாலையாகிவிட்டது,
ஒரு பயத்துடனே கீழிறங்கி உள்ளப்போகவா? வேண்டாமா? என்று ரிஷியும் சந்தனாவும் தம்பதி சகிதமாக நிற்கவும், அவளது கழுத்திலிருந்த தாலியே காட்டிக்கொடுத்தது, அவர்களின் திருமணம் முடிந்ததை.
வெளியே நின்றிருந்த ஒருவர் விஜி ஓடிப்போன உன் மகன் திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான் பாரு என்று தண்டோரா போடாத குறையாக கத்தி சொல்லவும்...
வீட்டிலிருந்த எல்லோரும் ஓடிவர முதலாக வந்த நந்தனின் மகன் ஓடி வந்து அவனிடம் சித்தப்பா என்று தாவிக்கொண்டான்...
அதற்குள் வர்ஷா வந்து ரிஷியையும் சந்தனாவையும் முறைத்துப் பார்த்தவள்
என்னடா சித்தப்பா நொத்தப்பான்னுட்டு
இங்க வாடா என்று பையனை இழுத்து தூக்கிக் கொண்டாள்...
அதுவே சொன்னது மொத்தக் குடும்பமும் அவன் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கின்றார்கள் என்று...
ரிஷியின் அருகில் வந்த விஜிம்மா அவனை ஓங்கி அறைந்திருந்தார்..
What's Your Reaction?






