உறைபனி என்னில் பொழிகிறாய்-13

Mar 28, 2024 - 13:43
 0  394
உறைபனி என்னில் பொழிகிறாய்-13

அத்தியாயம்-13

நாகராஜ்  தன் மனைவி ஜமுனாவுடன்  அவனின் வீட்டிற்குள் செல்ல...

வீடு எதுவோ கலையிழந்தது போன்று  அமைதியாக இருந்தது...எப்பவும் போல விஜிம்மாவும் வர்ஷாவும் சமயலறையில் தங்களது வேலையை செய்துக் கொண்டிருந்தனர்...இப்போது முன்பு மாதிரி வர்ஷாவிடம் அதிகமாக ஒட்டுதல் காண்பிக்கவில்லை  விஜிம்மா.

ரிஷியிடம் தஞ்சாவூரில் வைத்து  எங்க வீடு யாரும் உள்ள வரக்கூடாது என்று வர்ஷா   சொன்னது அவருக்கு  வருத்தம்.. என்ன தான் ரிஷி மீது கோபம் இருந்தாலும்  வர்ஷா அப்படி சொன்னது பிடிக்கவில்லை...நாளைக்கு நம்ம மேல எதாவது கோபம் என்றாலும் இப்படித்தான சொல்லுவா? என்ற எண்ணம் மேலோங்கியது...அதற்காக சண்டையெல்லாம் போடமாட்டார்.  தன்னுடைய எல்லையை சுருக்கிக்கொண்டார் அவ்வளவே...

வர்ஷாவிற்குமே  அது புரிந்திருந்தது...

என்றாலும் தனது சித்தப்பா மகள், தன் தங்கை வித்யாவிற்கு ஒன்று என்று வரும்போது வலிக்கத் தான் செய்யும், அதைத் தான் நானும் வெளிப்படுத்தினேன் என்று தன்பக்கம் நியாயம் இருக்கிறது என்று அமைதியாக இருந்தாள்.

(நல்லவேளை விஜிம்மா  இந்த சீரியல்லாம் பார்க்கமாட்டார் போல, இல்லைனா இதுக்கு எதாவது பலிவாங்க கிளம்பிட்டா...நந்தனின் வாழ்க்கை அவ்வளவுதான்)

அந்த வீட்டில் ரிஷியின் பேச்சுக்கள் இல்லாமல்  விஜிக்கு எதுவோ குறைந்தது போன்றே உணர்வு...

அழைப்பு மணியை அடித்துக்கொண்டு நாகராஜ் காத்திருக்க...ராமகிருஷ்ணன் வந்துக் கதவைத் திறந்தார்...அவரோ யாரு என்று புரியாமல்...யாருங்க என்று வினவ.

வணக்கம் நான் ரிஷியோட மாமனார் என்று தன்னை  அறிமுகப்படுத்தவும்.

"வாங்க வாங்க உள்ள வாங்க, பிள்ளைங்க எல்லோரும் எப்படி இருக்காங்க" என்று பொதுவாக விசாரித்தார்.

"எல்லோரும் நல்லா இருக்காங்க,ரிஷி அம்மாவ வரச்சொல்லுங்க உங்க இரண்டுபேருகிட்டயும் தான் பேசணும்" என்றதும்...உள்ள இருந்து  விஜிம்மா வந்து தன் கணவனைப் பார்த்து யாரு என்று கையால் கேட்க...

நம்ம இரண்டாவது சம்மந்தி என்று சிரித்துக்கொண்டே சொல்லவும்...

விஜிம்மாவின் புன்னகை மறைந்து ஒரு இறுக்கம் வந்தது.

அப்படியே அமைதியாக  நின்றிருந்தார்  வாங்க என்று கூட சொல்லவில்லை, நாகராஜ் இதை எதிர்பார்த்தே வந்திருந்ததால்  ராமகிருஷணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்...

"எல்லோரும்  அவங்க அவங்க பிள்ளைங்க நல்லதுக்குத்தான் சில விசயங்களை திடீர்னு முடிவெடுத்து செய்வாங்க,

அப்படித்தான் நாங்களும் செய்தோம்...

அவங்க இரண்டுபேரோட விருப்பப்படி தான்  கல்யாணம் நடந்துச்சு, அது சரியா? தப்பா? என விவாதிக்க வரலை.அடுத்து  என்ன செய்யலாம்னுதான் யோசிச்சு வந்திருக்கேன்...

"விஜிம்மா  என்னோட பையனுக்கு  நல்லது செய்ய நீங்க யாருங்க. உங்க பிள்ளைக்கு நல்லது செய்றீங்கனு, என் பையனை உங்க வீட்டுக்கு மருமகனாக்கிட்டீங்க...இது எந்தவகையில நியாயம்" என்று விஜிம்மா கண்கள் கலங்க கேட்டார்...அதற்குள் ராமகிருஷ்ணன் மனைவியின் கையைப் பிடித்து  அழுத்தியவர்...

நடந்த விசயங்கள் பேசி பிரயோஜனமில்லை...நம்ம பையனுக்கும் விருப்பம் இருக்கப்போய் தான் அவங்க தைரியமா முடிவெடுத்து செய்தாங்க...

அதனால நம்ம அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது.அவங்க எதோ விசயமாகத்தான் வந்திருக்காங்க. அது என்னனுக் கேட்போம்

என்றதும் விஜிம்மா அமைதியாக இருந்தார்...

நகராஜ் வந்த விஷயத்தை சொன்னார் என்னுடைய தொழில் வட்டாரத்தில் கண்டிப்பா என் மக கல்யாணத்தை தெரியப்படுத்தணும், அதுக்காக அடுத்த வாரம் ரிசப்ஷன் வச்சிருக்கோம்.

நீங்க கண்டிப்பா வந்து மாப்பிள்ளை சார்பா நிக்கணும்னு  ஆசைப்படுறோம்... நியாயமா பார்த்தா உங்க கிட்ட ஆலோசனை செய்துட்டுத்தான் இதை செய்து இருக்கணும்; ஆனால் நம்ம இரண்டு குடும்பமும் சூழ்நிலை சரியில்லை அதுதான்...

"எங்களால அந்த இடத்துக்கு வரமுடியாது...கல்யாணம் பண்ணும்போது எங்க நியாபகம் வரலை...இப்போ வருதா" என்று கேட்கவும்.

ஜமுனாவுக்கு கோபம் வந்து நாகராஜை திரும்பிப் பார்க்க... அவரோ மிகவும் சாந்தமாக நீங்க எனக்கு தங்கை முறை வேணும்... இங்க பாரும்மா நம்ம பிள்ளைங்க நிறைய இடத்துல தலை குனியாமல் பாத்துக்க வேண்டியது பெத்தவங்களாகிய நம்மோட பொறுப்பு. நான் எங்க வீட்டு பிள்ளைங்களை  அப்படித்தான்  வளர்த்திருக்கேன்.

உங்க பையன் தலை குனிந்து நிக்கிறதும், நிமிர்ந்து நிக்கிறதும் உங்க கைலதான் இருக்கு...எதுவாக இருந்தாலும் தெளிவா முடிவெடுங்க...என்று தம்பதி சகிதமாக பத்திரிக்கையை  தாம்புலத்தட்டில் வைத்துக் கொடுத்தார்.

ராமகிருஷ்ணன் முன்வந்து வாங்கிக்கொண்டார்...நாகராஜ் சிரித்தவர்...

ரிஷி உங்கமேல உயிரையே வச்சுருக்காங்க, நீங்க நல்லவங்களா? கெட்டவங்களானு எங்களுக்குத்தெரியாது... ஆனால் கண்டிப்பா நல்ல அம்மா அதுதான் எங்க வீட்டுல இருந்தாலும் அவங்களோட மனசெல்லாம் இங்க இருக்கு ரிஷிக்கு.

இப்படி ஒரு  குடும்பம் கிடைக்க என் பொண்ணுதான் கொடுத்து வச்சுருக்கணும்.. நாங்க வர்றோம் கண்டிப்பா  பங்க்க்ஷனுக்கு  வந்திடுங்க என்று விடைபெற்று சென்றுவிட்டார்.

அந்த  தாம்பூலத் தட்டு அப்படியே டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணனுக்கு தெரியும் கண்டிப்பாக விஜி அதை எடுத்துப் பார்ப்பார் என்று...

அதற்குள் மதியவேளையில் ரிஷி தனியாக வந்தான்...வெளியே நின்று "விஜி" என்றழைக்கவும்...மகனின் சத்தம் கேட்டு  ஓடிவந்தவர் பாதியில் தான் நியாபகம் வந்தது  அவனது செயல் எல்லாம்...உடனே முன்னறையின் அருகிலேயே நின்றுவிடவும்...ராமகிருஷ்ணன் கதவை நன்றாகத் திறந்து வாடா ஏன் வெளியே நிக்குற என்று சத்தமாக அழைக்கவும்...

இந்த வீட்டு எஜமானி உள்ளக் கூப்பிடலையே? உள்ள வந்தப்பிறகு என் வீடு,நீ வீட்டைவிட்டு வெளியப்போனு சொன்னா எங்கப்போறது ராமா? எஙகப்போறது? என்று கையை வைத்து  நடித்துக் காண்பிக்கவும்...உள்ளே  நின்றிருந்த விஜிம்மாவுக்கு  கண்கள் கலங்கினாலும், அவனது பேச்சை கேட்டு லேசாக சிரித்துவிட்டார்...

ராமகிருஷ்ணனும்  அவனது காதைப் பிடித்து  திருகி...உன் வாய்தான்டா  உனக்கு கேடு...உன்னை, உன் பேச்சை ரொம்ப மிஸ் பண்றோம்டா என்றதும்...நந்தனின் மகன் வந்து எட்டிப்பார்த்து  வர்ஷா பின்னாடி வர்றாளா? இல்லையா? என்று பார்த்து பார்த்து வந்து ரிஷியின் கால் பக்கத்தில் நின்றுக்கொண்டான்...

அதை பார்க்கும்போது ரிஷிக்கு கண்கள் கலங்கியது...நான் தப்புபண்ணிருக்கேனு நினைச்சா என்னைத் திட்டுங்க, பிள்ளை என்ன பண்ணினான்...அவன் என்கூட பேசுறதுல என்ன வந்துச்சு உங்களுக்கு

என்று கோபப்பட்டவன்...என்னோட ரிசப்ஷன் விசயமாக சொல்லத்தான் வந்தேன் கண்டிப்பா எல்லோரும் வந்திருங்க...எல்லோருடைய முன்னாடியும் நான் அநாதை மாதிரி நிப்பேன், பார்த்துக்கோங்க என்று சின்னவனை கையில் தூக்கிக் கொண்டுப் போய் அவன் கை நிறைய பொருட்களை வாங்கிக் கொடுத்து, வீட்டில் விட்டுச் சென்றான்...

இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மெதுவாக எழும்பிய விஜிம்மா. அப்படியே வெளியே வந்து டேபிளில் இருந்த அந்த பத்திரிக்கையை எடுத்து பார்த்தார்.

அதிலே தெரிந்தது அவர்களுடைய வளமையும் செழுமையும்... வீட்டோடு மருமகனா போயிட்டானோ? இப்பொழுது சந்தேகம் எழுந்தது அவருக்கு...

நம்ம சம்மதம் தெரிவிச்சிருந்தா நம்ம வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருப்பானோ?

நம்ம கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று யோசித்தவர், என்ன இருந்தாலும் என் தம்பி பொண்ணு மாதிரி வருமா என்று நிறைத்தவர்... பத்திரிக்கையின் தன் மகனின் பெயரை கண்டதும் அவரை அறியாமலே ஒரு சந்தோஷம் வந்தது...அபிரிஷி என்று வாசித்துப் பார்த்து சந்தோஷப்பட்டார்....ம்ம் என்று பெருமூச்சை விட்டவர்  அழைப்பிதழை அங்கேயே வைத்து சென்று படுத்துவிட்டார்.

அடுத்த நாள் சந்தனா வீட்டில் எல்லாரும் மொத்தமாக அமர்ந்திருந்து யாருக்கெல்லாம் பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது.

நகராஜ் சொன்ன ஒரு பெயரைக் கேட்டு அண்ணன் தம்பி ஐந்து பேரும் சிலிர்த்து எழுந்து விட்டனர்...

"என்ன அவங்களுக்கு எதுக்கு அழைப்பு கொடுக்கணும்,வேண்டாம்,அவங்க வரணும்னு அவசியமில்லை" என்று சொல்ல.

ரிஷி என்னடா இது புதுசா எதுக்கோ சண்டக்கோழி மாதிரி எல்லாரும் ஒன்னுபோல வீறுகொண்டு எழும்புறாங்க என்னவாயிருக்கும் என்று  பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆம்...அது ஏற்கனவே அவர்களுடன் வியாபாரத்தில் சில தொழிலில் பங்குதாரராக இருந்து, பிரிந்து சென்ற  தொழிலதிபர் மாணிக்கவேல்தான்.

நாகராஜ் பதில் சொன்னார் நம்ம யாருக்கும் பகையாளியும் இல்லை யாருக்கும் எதிரியும் இல்லை... அவன் விருப்பத்தை அவன் சொன்னான்; நமக்கு பிடிக்கல வேண்டாம்னு சொல்லிட்டோம் அவ்வளவுதான்; அதுக்கு எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க.

அப்பா புரியாம பேசாதீங்க... அதனாலதான் இவ்வளவு பிரச்சனைகள்...இல்லைனா இப்படி ஒரு சூழ்நிலையே நமக்கு வந்திருக்காது தெரியும்தானே.

நாகராஜோ பத்திரிக்கை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை கொடுப்போம் வர்றதும் வராததும் அவங்க விருப்பம். அதுவுமில்லாம எல்லாருக்கும் கொடுக்கும்போது அவனை ஒதுக்கி வச்ச மாதிரி இருக்கும்.அவன் எப்படியும் வரமாட்டான் கொடுக்க வேண்டியது நம்ம கடமை, அதை  சரியாக செய்வோம்... நானே அவனோட ஆபீஸ்ல போய் கொடுத்துடறேன் நீங்க யாரும் போக வேண்டாம்..சரியா என்று பேச்சை முடித்துவிட்டார்.

அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ரிஷி "யாருக்கு அழைப்பு கொடுக்க வேண்டாம்னு பிரச்சனை,என்று கேட்கவும்"

தனராஜ் ரிஷிக்கு விளக்கம் சொன்னார் "அது ஒன்னுமில்லை மாப்பிள்ளை மாணிக்கவேல் பையன் விஷ்வேசுக்கு சந்தனாவை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பொண்ணு கேட்டாங்க; சந்தனாவுக்கும் விருப்பமில்லை, எங்களுக்கும் விருப்பமில்லை,அந்தப் பையன் கேரக்டர் சரியில்லைனு வேண்டாம்னு சொல்லிட்டோம்... அதுல அவங்க கொஞ்சம் பிரச்சினை பண்ணினாங்க... அதனாலதான் தொழில்ல இருந்தும் விலக்கிட்டோம்....அதுதான் பிரச்சனை."

ரிஷி" ஓஓ. அப்படியா"என்று விட்டுவிட்டான்.

சந்தனா  கேட்டாள் " யாருப்பா அந்த மாணிக்கவேல், எனக்கு ஞாபகமே இல்லையே,, அவங்க பேரும்  கேட்ட மாதிரி இல்லையே"

ரிஷிக்கு அதிர்ச்சி இப்போது;

இவளைத்தானப் பொண்ணு கேட்டு பிரச்சனை செய்தாங்கனு சொன்னாங்க. இவ என்னடான்னா அவளுக்குத் தெரியாதுன்னு சொல்றா...என்று அவளையேப் பார்த்திருந்தான்.

இப்பொழுது மொத்த குடும்பமும் சுதாரித்து விட்டது... பாப்பா அவங்களை உனக்குத்  தெரியாது. எங்கள் தொழில் மூலமாக எங்ககிட்டயே நேரிடையாகக் கேட்டாங்க.

அப்படியே பேசி அங்கயே அனுப்பிட்டோம், வீட்டுக்குலாம் வந்ததில்லையா அதான் உனக்குத் தெரியாது.

" ஓஓஓ...அப்படியா" என்ற சந்தனா, இப்போது ரிஷியை சைட்டடிக்கும் வேலையை சரியாக செய்துக் கொண்டிருந்தாள்.

ரிஷிக்கு இப்பொழுது அந்த விஷயத்தை அப்படியே விடனும் என்று தோன்றவில்லை...எதுவோ சந்தனா விசயத்துல மறைக்குறாங்க எனப் புரிந்துக்கொண்டான்...நம்மளா அதைக்கேட்டா  பிரச்சனை பண்றமாதிரி இருக்கும் என நிதானித்தான்....அவனுக்கு சந்தனாவின் காதல்மேல் சந்தேகமில்லை...அவள் மாசுமருவற்றவள் என்று அதீத நம்பிக்கை அவளது அன்பின் மேலும் அவளின் மேலும் இருந்தது...எவ்வளவு  நம்பிக்கை இருந்தாலும் கோபத்தில் பேசும் ஒரு வார்த்தை போதுமே...உயிரை வேர் வரைக்கொல்லுவதற்கு...

நாட்கள் விரைவாகச் செல்ல வீட்டில் எல்லோரும் ரொம்ப பிஸியாக வேலையில் இருக்க...இங்கு ரிஷிக்கும் சந்தனாவிற்கும்  வீடே ஹனிமூன் இடமாக மாறியது...அவர்களை அங்கு  லவ் பேர்ட்ஸ்ஸாக விட்டுவிட்டனர்...

அந்த மாளிகையே  அவர்களது காதல் வளர்க்க போதுமானதாக இருந்தது...

பத்மா ரிஷியை தன்னுடைய சொந்த மகனாகவே பார்த்துக்கொண்டார்...எல்லா விசயத்திலும்...ரிஷிக்கு  அவரது பாசம் புரிந்தது...அவரை வேண்டாம் என்று விட்டுப்போன மகனைத் தன்னில் தேடுகிறார் என்று...அப்போதெல்லாம் விஜிம்மாவிடம் அவன் அடிக்கும் லூட்டித்தான் நியாபகம் வரும்...அவனது வீட்டை ரொம்ப தேட ஆரம்பித்தான் மனதால்.

இப்படியாக அவர்களது ரிசப்ஷன் நாளும் வந்தது எல்லாமே சந்தனாவின் சொந்தங்களும், அவர்களது ஆபிஸில் வேலை பார்க்கிறவர்களுமாக  அந்த பெரிய மண்டபமே நிறைந்து வழிந்தது...எது எப்படியோ அண்ணன் தம்பி அத்தனை பேரும் சிறப்பாக செய்திருந்தனர்.

தங்களது தங்கைக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தனர்.

ரிஷி  பிரமித்தான்,இதெல்லாம் கனவில்  நடக்கவேண்டும் என்று  நினைத்தது.. இப்போது நேரில் நடக்கவும் கண்கள் மத்தாப்பாக விரித்துப் பார்த்தான்.

ஆனாலும் மனசுக்குள் விஜிம்மா வரவேணுமே..தன்னுடையக் குடும்பம் வரவேண்டுமே என்று ஏங்கிக் காத்திருந்தான்...

பாதிவேளையில் விஜிம்மா, ராமகிருஷ்ணன், குட்டிப்பையன், நந்தன் நால்வரும் வந்திருந்தனர், வர்ஷா வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துவிட்டாள்...

அவர்கள் வருவதை எதிர்பார்த்திராத சந்தனா வீட்டினர் அவர்களை அப்படித் தாங்கினர்.

வாசலிலேயே அவர்களை ப்ரணவ் வரவேற்க...ஏற்கனவே ரிஸ்வானும் ராமகிருஷ்ணனும் நல்ல பழக்கம் என்பதால்,ராஜ உபச்சாரம் நடந்தது. வந்திருந்த எல்லா நட்பு வட்டாரத்திற்கும் அவர்களை எந்தவித பந்தா இல்லாமல் அறிமுகம் செய்து வைத்தனர்.

அவர்களை மேடையேற்றி  இதுதான் எங்கவீட்டு மாப்பிள்ளையின் குடும்பம் என்று அறிமுகம் செய்து வைத்தனர்...

சந்தனாவிற்கோ விஜிம்மாவைப் பார்த்ததும்  பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சு தாயின் சிறகில் அடைக்கலம் தேடுவதுப் போல ரிஷியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றாள்...

ரிஷிக்கும் அவளது உணர்வு புரிந்தது. சந்தனாவின் பாசமலர்கள் இல்லை என்றால் இன்று ரிஷியும் சந்தனாவும் இப்படி ஜோடியாக நின்றிருக்க முடியாது...

ஒரு வேளை வித்யாவின் கணவனாக கூட மாறி இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும் அதனால் விஜிம்மாவை கண்டதும் சந்தனாவிற்கு  இயற்கையாக  பயம் வரத்தான் செய்தது.

சந்தனாவிற்கு உலகம் தெரியவில்லை; அதுதான் உண்மை போகப்போக விஜிமாவை புரிந்து கொள்வாள் என்று நம்பினான்.

அந்த நேரம் உள்ளே வந்த விருந்தாளியைக் கண்டு பாசமலர்கள் ஐந்தும்  முகத்தை இஞ்சித் தின்றதுப் போல வைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இதைப் பார்த்த ரிஷிக்கு என்னடா இவனுங்க மொத்தமா முகத்தை உர்ரென்று வச்சிருக்கானுங்க? இப்போதான எங்க வீட்டளுங்க வரும்போது நல்லாதான இருந்தானுங்க...என்று வெளியேப் பார்க்க.

அவனது மாமனார் ஒருபெரிய மனிதனுடனும்இளைஞனுடனும் பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்.

சந்தனாவிடம் மெதுவாக குனிந்து அது யாரு? உனக்குத் தெரியுமா?

சந்தனாவோ தெரியலையே...அப்பாவோட பிஸினஸ் ஆட்கள் யாராவது இருப்பாங்க என்று சாதரணமாக சொல்ல.

இல்லையே? நம்ம மச்சான்க மூஞ்சியே சரியில்லையே ஒருவேளை இதுதான் அந்த மாணிக்கவேலும் அவன் பையனுமாக இருக்குமோ என்று சரியாக கணித்தான்.

அவர்களை ரிஷி-சந்தனாவின் அருகில் அழைத்து அறிமுகப்படுத்திவைத்தார் நாகராஜ்.

ரிஷியின் அருகில் வந்ததும் நக்கலாக சிரித்தவன்...மெதுவாக எச்சில் சாப்பாடுதான் உனக்கு இனிக்கும் போல மூஞ்சைப் பார்த்தாலே தெரியுதே என்று கிசுகிசுத்தவன் போட்டோ எடுத்து முடியவும் கீழிறங்கிவிட்டான்.

ரிஷி லூசுப்பய எங்கவந்து என்னப் பேசிட்டுப் போறான் பாரு என்று அலட்சியமாக கீழே நின்றிருந்தவனைப் பார்த்தான்.

ஆனால் அவனது கண்கள் என்னமோ சீனி மிட்டாயை மொய்க்கும்  ஈ போல அவனது கண்கள் சந்தனாவை மொய்த்தது...இதை ரிஷி கவனிக்கத் தவறிவிட்டான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow