உறைபனி என்னில் பொழிகிறாய்-2

Mar 23, 2024 - 17:40
 0  566
உறைபனி என்னில் பொழிகிறாய்-2

அத்தியாயம்-2

ரிஷி இரண்டே வாரத்தில் சென்னையில் உள்ள கம்பேனிக்கு போவதற்கு தீர்மானித்து சம்மதம் சொல்லவும், அங்கிருந்து எல்லாம் முடித்து சென்னைக்கு வருவதற்கு ஒரு மாதக்காலம்  ஆகிவிட்டது.

 

அந்த வேலையில் சேருவதற்கு முன்பு நன்றாக யோசித்தான்.இப்போது இருக்கும் கம்பேனி தனியாக உள்ளது, ஆனால் சென்னையில் உள்ளது ஒட்டுமொத்தக் குழுமம் சேர்ந்தது, இன்னொன்று சம்பளம் இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு, அதுவுமில்லாமல் தான் பிறந்து வளர்ந்த ஊரு வேறு என்று பலகோணத்தில் யோசித்தவன் ஒன்றை மறந்துவிட்டான்...

 

ஆடு வளர்ப்பது கறிக்கடைக்கு கொடுக்குறதுக்குத் தான் அழகு பார்க்கறதுக்கு இல்லை என்பதை...எல்லோரையும் வேலையவிட்டு தூக்கிட்டு உனக்கு மட்டும் வேற வேலைக் கொடுத்தா யோசிக்கமாட்டியா ரிஷி(உன் கிரகம்)

 

அவனது அப்பாயின்ட்மென்ட்  ஆர்டர் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, தனது பெட்டிப்படுக்கையை எல்லாம் மூட்டை கட்டி சென்னை வந்து சேர்ந்தாச்சு.

 

காலையிலேயே ரிஷியை எழுப்புவதற்கு விஜி மேல வந்து...நன்றாக கனவுக்கண்டு உறங்கிக் கொண்டிருந்தவனின் முதுகில் இரண்டு  அடிப்போட்டவர்...கும்பகர்ணா எழும்புடா மணி பனிரெண்டாகுது, இன்னும் தூங்கிட்டிருக்க...என்று சத்தம் போட்டு எழுப்பவும், அவனது அண்ணன் மகன் அவனின் முதுகின் மேலேறி படுத்துக்கொண்டான்.

 

"ரிஷிப்பா  எந்திரி விதி சித்தி வந்திருக்கா"

என்றதும் கண்ணை லேசாகத் திறந்தவன், அவனைப் பார்த்து  என்னடா சொல்ற...

 

அவா எதுக்குடா இங்க வந்தா, தஞ்சாவூர்ல இருக்கா...அரைகுறை தூக்கத்தில் உளறவும்.

 

இல்ல விதி சித்தி இங்கதான் இருக்கா என்று சின்னவன் திரும்பவும் சொல்ல...சட்டென்று எழும்பி அமர்ந்தவன்.

 

யாரெல்லாம் வந்திருக்காங்க செல்லக்குட்டி ரிஷிப்பாக்கிட்ட எல்லாம் சொல்லு  என்று ரகசிய தூதுவரிடம் விசாரிக்க, பெரிய தாத்தா, குட்டி தாத்தா அப்புறம் விதி சித்தி...

 

டேய் அவ விதி சித்தி இல்லடா என்னை சுத்தி பின்னப்பட்ட சதிடா சதி...இரு குளிச்சிட்டு வர்றேன் என்று குளித்து ரெடியாகி வெளியே வரவும், அவனுக்கு காபி கொண்டுவந்த விஜிம்மா, குடிச்சிட்டு சீக்கிரம்  கீழ வா என்றதும்...

 

விஜிம்மா  இங்க வா, உங்கண்ணனும் தம்பியும் இப்போ எதுக்கு இங்க அவசரமா வந்திருக்காங்க என்று கேட்டான்.

 

உனக்கு யாருடா அதுக்குள்ள சொன்னது என்று வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு கேட்டார்.

 

"அதுக்கெல்லாம்  ஆள் வச்சுருக்கோம் அதைவிடு பேச்சை மாத்தாத, என்ன திட்டம் போட்டு  உன் அண்ணனையும் தம்பியவும் இங்க வரச்சொல்லிருக்க அதச்சொல்லு முதல்ல"

 

"ஒன்னுமில்லடா அண்ணனுக்கு  செக்கப்புக்குனு  வந்திருக்காங்க...

அப்படியே உன்னையும்" ச்ச என நெற்றியில் அடித்து... இல்லையில்லை  நம்மளையும் பார்த்திட்டுப் போகலாம்னு வந்திருக்காங்கடா என்றதும்...

 

ம்மா ..நீ ரொம்ப நல்லவம்மா லேசா பேசினாலே உண்மையெல்லாம் சொல்லிடுற, அவங்க என்னை பார்க்கத்தான் வந்தாங்கனு சொல்லிட்டாப்பாரு என்று அவரது தாடையை பிடித்து கொஞ்சியவன்.

 

அப்புறம் நந்தனுக்கு  எப்படி கல்யாணம் பண்ணினனு கொஞ்சம் உன் மைண்ட்ல ரிவைண்ட் பண்ணி ஓட்டிப்பாரு. ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டு, உன் அண்ணன் பொண்ணு வர்ஷாவ வரவச்சு, எப்படிலாம் திட்டம் போட்டு அவனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்ட....என்கிட்ட உன் பிளானைக் கொண்டுவந்தனு வையேன்  நான் உன் தம்பி பொண்ணு வித்யா கழுத்துல தாலிலாம் கட்டமாட்டேன்...

 

என்னடா சொல்ற  நான் திட்டம்போட்டு நந்தன் வர்ஷா கல்யாணம் நடத்தினனா?ஐயோ கடவுளே என் பிள்ளைக்கு அப்படி செய்வனா? என்னடா அம்மா மேலயே பழி போடுற என்று முந்தானை எடுத்து கண்ணை துடைக்க...

 

அம்மா விஜிம்மா உன் பெர்பாமன்ஸ் கண்ணாம்பாவை விட நல்லாயிருக்கு, ஆனாப்பாரு எனக்குத் தான் நம்பிக்கை வரலை...

 

இங்கப்பாரு கீழ வருவேன் மாமா முன்னாடி எதாவது பாசமலர் சீன் போட்ட;  அப்படியே  போய் கழுத்துல ருத்ராட்ச மாலை போட்டு சந்நியாசியா போயிடுவேன் இமயமலைக்கு...ரிஷியானந்தா  ஆசிரமம் வச்சிருவேன் பார்த்துக்க...என்ன மாலையும் கழுத்துமா பார்க்கணும், என் பிள்ளைங்களை பார்க்கணுங்கற ஆசையெல்லாம் காணமாப் போயிடும் பார்த்துக்க என்றதும்.

 

அவரது முகம் உண்மையிலயே வாடி கண்ணீர் வந்துவிட்டது.

 

இப்போதுதான் உணர்ந்தான்  உண்மையிலயே அம்மா அழுததும், ஐயோ விளையாட்டப் பேசி அழவச்சிட்டனே என்று அவரது தோளில் கைப்போட்டு ம்மா விடும்மா சும்மா பேசிட்டேன் அழாத, என்னோட கல்யாண விசயத்துல என்னையும் கொஞ்சம் நினைச்சுப் பார்த்து முடிவெடுனு சொல்றேன் சரியா, வா என்  முரட்டு மாமன்களை போய் கவனிப்போம் என்று அவரையும் இழுத்துக் கொண்டு வந்தவனை பார்த்ததும் விஜியின்  அண்ணன் " வாங்க சின்ன மருமகனே எப்படி இருக்கீங்க" முன்னாடிலாம் அவன் பெயரைச் சொல்லித்தான் அழைப்பாங்க...எப்போ வர்ஷாவை இங்க கட்டிக்கொடுத்தாங்களோ அன்றையிலிருந்து தான் சின்னமருமகனேனு கூப்பிடுறாங்க...

 

"நல்லா இருக்கேன் மாமா நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஊருல அத்தைங்க, பாட்டியெல்லாரும் எப்படி இருக்காங்க" என்று நலவிசாரிப்புகள் முடிந்ததும்...

 

பெரியவர் அவனிடம் "அப்புறம் சொல்லுங்க , நீங்க இங்கயே வேலை மாற்றலாகி வந்தாச்சுனு தங்கச்சி சொன்னா...சந்தோஷம் எப்போ வேலையில சேரணும் என்று கேட்கவும்...

 

"நாளைக்கு ஜாயிண்ட் பண்ணனும் மாமா"

 

"ஓ அப்படியா...உங்க கல்யாண விசயமா  எதாவது யோசிச்சு வச்சிருக்கீங்களா? இல்லை தங்கச்சி சொன்னா உங்களுக்கு குரு பார்வைத் தொடங்கிட்டுனு, சீக்கிரமா   கல்யாணம் முடித்து விடலாமா? 

 

இதைக் கேட்டதும் இது ரிஷி  லேசாகத் திரும்பி தனது அம்மாவை முறைத்து பார்க்க...

 

"ண்ணா அவன் இன்னும் சாப்பிடவேயில்லைணா , சாப்பிட்டு முடிச்சிட்டு வந்து நம்ம எல்லாரும் உட்கார்ந்து பேசுவோம்" என்று ரிஷியை அழைத்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்கு வந்ததும்...

 

ரிஷி சாப்பிடாமல் அப்படியே தட்டை பார்த்துக் கொண்டே இருந்தான்...அங்கு வந்த வித்யா "சின்னத்தான் எப்படி இருக்கீங்க,என்ன சாப்பாடு தட்டை பார்த்துட்டு சாப்பிடாமலயே இருக்கீங்க சாப்பிடுங்க அத்தான் என்று பரிமாற போக...

 

சட்டென்று கைவைத்து தடுத்தவன். நானே சாப்பிட்டுக்குறேன் என்று கோபத்தில் கத்தியவன்,படபடவென சாப்பிட ஆரம்பித்தான்.

 

வித்யாவின் முகம் வாடவும் வர்ஷாதான் அவளது கையைப்பிடித்து வெளியே அழைத்து சென்றாள்.

 

சாப்பிட்டு முடித்து வந்தவன் யாரையும் பார்க்காமல்  தனது வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். சென்னையில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு கிளம்பியவன்.

 

அப்படியே கடற்கரைக்கு சென்று மணலில் தலையில் கைக்கொடுத்து படுத்திருந்தவன்

யோசனையில் இருந்தான்.

 

சின்ன மாமா பொண்ணு வித்யா அழகுதான் டிகிரி முடித்து இருக்கா, ஆனாலும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மா நினைக்கிற மாதிரி வித்யா குடும்பத்தை நல்ல நடத்திக் கொண்டு போகிற பொண்ணு தான், நந்தனின் மனைவி வர்ஷாவைப்போல அமைதியாக குடும்பத்தை தாங்கி வழிநடத்தும் பொண்ணுதான், ஆனாலும் அது அவ்வளவு திருப்திகரமாக இல்லை...

 

பொம்மை மாதிரி நமக்கு அடிமையாக இருப்பாள் தான்,நம்ம என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு, சரித்தான் சரித்தான் என தஞ்சாவூர்காரி தஞ்சாவூர் பொம்மை மாதிரி இருப்பா. 

 

அந்த வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுது என்று நினைத்தவனின் கண்களுக்கு முன்பாக அன்று கோவிலில் பார்த்த சந்தனாவின் உருவம்  வந்துப்போனது...அப்படி பொண்ணுனா நல்லாதான் இருக்கும்  என்றதும் அவளை சுற்றி நின்றிருந்த அவளது அண்ணன்களின் நியாபகம் வரவும், ஒரு நிமிடம் ரிஷியின் உடல் குலுங்கி எப்பா  வேண்டாம்டா சாமி அவள் இருக்க திசைக்கே ஒரு கும்பிடு போட்டு மறந்ததிடுடா ரிஷி...உரலுக்குள்ள தலைய நீயே விட்டுக்காத....இடியும் அடியும் கன்பார்மாகிடும் என்று  தனக்குத் தானே பேசியவன் மணியை பார்க்க நள்ளிரவு தாண்டிவிட்டது என்றதும் எழும்பி நடந்தவன்.

 

"விஜி கிட்ட இன்னைக்கு தீர்மானமா  வித்யாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடனும்" என்று முடிவெடுத்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தான்.

 

கதவைத் திறக்கும்போது விஜயலட்சுமி எதுவுமே பேசாமல் அமைதியாக வந்து, அவனுக்கு சாப்பாடு போடவும்... அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.ம்ஹூம்  அவனிடம் எதுவுமே பேசாது அமைதியாக தனதறைக்குள் சென்றுவிட்டார்.

 

இவன் வேகமாக வெளியே சென்றதும் அவனின் மாமாக்களும் வித்யாவை அழைத்துக்கொண்டு  ஊருக்கு கிளம்பிவிட்டனர்...அவர்களுக்கு ரிஷியின் போக்கு பிடிக்கவில்லை, தங்களுக்கு  மரியாதை தரவில்லையென்று விஜயலெட்சுமியிடமும், வர்ஷாவிடமும் வருத்தப்பட்டுக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

 

தனது பிறந்த வீட்டு சொந்தங்களை மரியாதைக் கேடாக நடத்தினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும் அந்த கோபத்தில் இருந்தார் அவர்.

 

அவனுக்குமே அம்மாவை பார்த்து பாவமாக இருக்கதான் செய்தது. அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது என்று. 

 

இருந்தாலும் அம்மாவோட ஆசைக்காக திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது என்று முடிவு செய்தான்...

 

ஆனால் அந்த முடிவு ஆட்டங்காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை...

 

அடுத்த நாள் வழக்கம் போல எழுந்து வேலையில் சேரவேண்டும் என்பதால் படுத்து தூங்கியவன் காலையில் அலாரம் அடிக்கவும் எடுத்துப் பார்க்க, நேரமாகிவிட்டது...

 

ஐயோ விஜி பழிவாங்கிட்டியே! எழுப்பாம இருந்துட்டியே, முதல் நாளே ஆபிஸிற்கு லேட்டா போகணுமே என்று  அவசரமாக ரெடியாகி சாப்பிட வந்தவனுக்கு ஒன்றுமே இல்லை...

 

பக்கத்தில் இருந்த அண்ணனுக்கும் அப்பாவிற்கும் தட்டில் சாப்பாடு இருக்க இவனுக்கு ஒன்றுமில்லையென்றதும் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தவன் "உன்கிட்டயிருந்து இதை எதிர்பார்கலைமா" என்றவன் தனது வண்டியை எடுக்கவும் அவன் முன்பாக  வந்தவர் ஒரு டம்பர் நிறைய சத்துமாவுக் கஞ்சியை நீட்ட வாங்கி குடித்தவன்..

 

ஆனாலும் வர வர நீ ரொம்ப டெரர் அம்மாவா மாறிட்டுவர்ற விஜி...எதுக்கும் தஞ்சாவூர் மாமன்ககிட்டயிருந்து தள்ளியே இரு  என்று சொன்னவன் கிளம்பிவிட்டான்...

 

இவனை திருத்தவே முடியாது என்று தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்...

 

வண்டியில்  வேகமாக சென்றவனுக்கு  முதல் நாள் வேலைக்கு சரியான நேரத்துல போகவேண்டுமே என்ற அவசரமிருந்தது.

 

சிக்னலில் நின்றிருந்தாலும் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் புகுந்து சென்றுகொண்டிருக்க, அவனது பின்னாக வந்த ஒரு மெர்சிடஸ் காருக்கு வழிவிடாமல் இவன் குறுக்காவே ஓட்டிக்கொண்டு வர, ஒரு கட்டத்தில் கார்காரன் ஹார்ன் அடித்துக்கொண்டே வர, இவன் வழிவிடாமலயே செல்லவும்,  கடுப்பான கார்காரன்  வேகமாக அவனை இடிக்க வருவதுப்போல வரவும், சிறிதும் அசைந்தானில்லை...

 

சிறிது தூரம் வந்ததும் அவன் வண்டிக்கு முன்பாக வந்து சடென் ப்ரேக் போட்டதும் இதை எதிர்பார்க்காத ரிஷியோ,வண்டிக்கு ப்ரேக் போட முயற்சித்து இறுதியில் சரிந்து விழுந்தான்.

 

காரிலிருந்து ஒருத்தன் எட்டிப்பார்த்து  தனது ஆட்காட்டி விரலை கவிழ்த்து காண்பித்து சென்றுவிட்டான்.

 

ரிஷிக்கு  விரட்டிச் சென்று ஒரு காட்டுகாட்ட வெறி வந்தது இருந்தாலும் இது சரியான நேரமில்லை என்று வண்டியைத் தூக்கி நிறுத்தி கிளம்பினான்...

 

சுதாரித்ததால் அடி எதுவும் படவில்லை, ஆபிஸிற்கு வந்து சேரவும்,அங்கு அந்தக் காரை கண்டதும் யோசித்து நின்றவன்...அப்புறம் பார்த்துக்கலாம் என உள்ளே சென்று வரவேற்பறையில் விசயத்தை சொல்லவும், காத்திருக்க சொன்னவர்கள்...

 

சிறிது நேரத்தில் மேனஜரை பார்க்க உள்ளே போகச் சொல்லவும் சென்று பார்த்து வேலையில் சேர்ந்துவிட்டான்.

 

அது ஒரு யெரிய குழுமம் என்பதால் பல பிரிவுகளில்  வேலைக்கு ஆட்கள் இருந்தனர்...அதனால் அவனுக்கு  வேலை செய்ய எல்லா விபரத்தையும் விளக்கி சொல்லிக் கொடுத்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுக்கு எம்.டி.யிடமிருந்து அழைப்பு வந்தது.

 

எம்.டியின் அறையின் கதைவை தட்டி உள்ளே சென்றவன்  தலையில் தேங்காய் சிதறிய நிலை அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow